இந்தச் சிறார்கள் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.
ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
"சோபா சிப்வதுல" செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
Clean Sri Lanka திட்டத்தின் கீழ், இலங்கை ஹதபிம அதிகார சபை சுற்றுச்சூழலை நேசிக்கும் உணர்ச்சி மிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கும் "சோபா சிப்வதுல" திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அக்டோபர் 02 ஆம் திகதி ரத்மலானை இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் தனது கைகளால் பாடசாலை வளாகத்தில் ’நா’ (Ironwood) மரக்கன்றை நாட்டினார். அதற்குச் சமாந்தரமாக பாடசாலை மாணவர்களும் அதே நேரத்தில் 100 கன்றுகளை நட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைவாக, எஞ்சிய 08 மாகாணங்களிலும் மாகாண ஆளுநர்களின் தலைமையில் ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"இன்று காலையில் ஒரு பாடசாலையில் ஒரு கன்றை நாட்டி இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். இன்று எனக்கு ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்தது. இன்று எனக்கு ஒரு அழகான நாள்.
நமது அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை மாற்றுவோம் என உங்களிடம் வாக்குறுதி அளித்தோம். நாட்டை மாற்றுவதென்றால், அந்தப் பரிவர்த்தனைப் பயணத்தில் குடிமக்கள் என்ற வகையில் அனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு திட்டமே Clean Sri Lanka.
Clean Sri Lanka திட்டத்திற்கு மூன்று குறிக்கோள்கள் உள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு ஏற்றதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எம்மிடம் இருக்க வேண்டிய பண்புகளையும், விழுமியங்களையும் வளர்த்தெடுப்பதற்கு இந்தக் குறிக்கோள்கள் உதவுகின்றன.
இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்தச் செயல்திட்டத்தில் இந்தப் பண்புகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நாம் சமூகத்துடன் இணைந்து கட்டியெழுப்பியிருக்கும் விழுமியங்களின் காரணமாகவே பாடசாலை மாணவர்கள் இந்தக் கன்றுகளை நடும் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். சுற்றுச்சூழலுடன் இணைந்து, நாம் உயிர்வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியப் பொறுப்பு நமக்கு இருக்கின்றது.
நாம் இதைச் செய்வதன் மூலம் குழந்தைகள் மத்தியில் ஒழுக்கம் ஏற்படும். நாம் வாழ்கின்ற இந்த பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. அடுத்த தலைமுறையினரிடம் இதைவிடச் சிறந்த நிலையில் இந்தச் சூழலை ஒப்படைக்க வேண்டிய பொறுப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பற்றி நாம் கதைக்கும் போது அதில் ஒரு கருத்தாக்கம் இருக்கின்றது, ’நிலையான சூழல்’ (Sustainable Environment) என்பதே அதுவாகும். நமது அபிவிருத்தியை நாம் நிலையானதாக மாற்ற வேண்டும். நிலையானது என்ற கருத்தின் முக்கியப் பொருள் என்னவென்றால், இன்று இந்த நிமிடத்தில் நாம் செய்யும் அனைத்தும் எதிர்காலச் சந்ததியினரின் இருப்பைப் பற்றியும் சிந்தித்துச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அந்தத் தலைமுறையினரிடம் ஒப்படைக்கத்தக்க ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவது நமது பொறுப்பாகும்.
நிலையான எதிர்காலத்தை, நிலையான பயணத்தை நோக்கிச் செல்லவே வயது வித்தியாசமின்றி இந்நாட்டு மக்கள் என்ற வகையில் உங்கள் அனைவரையும் இத்தகைய திட்டங்களில் இணைத்துக்கொள்கிறோம்.
மரக்கன்றை நட்டு விட்டு அதனைப் பராமரிக்காதிருப்பது நல்லதல்ல. இந்த பாடசாலைக்கு வரும் உங்களைப் போன்ற மாணவர்களுக்காகவும், அடுத்த தலைமுறைக்கு நிழல் கொடுக்கும் மரங்களாக நடுவதோடு நின்று விடாமல், அவற்றை வளர்ப்பதையும், பராமரிப்பதையும் நீங்கள் அனைவரும் சிறப்பாகச் செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.
இலங்கையில் வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள். இந்த நாடானது பாரிய உயிரினப்பன்மைத்துவத்தைக் கொண்ட நாடாகும். அத்தோடு நம் நாடு மிகவும் அழகான ஒரு நாடாகும், அதற்குக் காரணம் நம்முடைய சுற்றுச்சூழலே ஆகும். ஆகையினால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நாம் மண்ணோடும் நீரோடும் சேர்க்கும் நச்சுப் பொருட்களைப் பற்றிய உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் பயணங்களை மேற்கொள்ளும் போது எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றை கையாளும் முறையைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணம் இவை அனைத்தும் சுற்றுச்சூழலுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இவை மூலமே நாம் நமது சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறோம். மனிதனே தனது சுற்றுச்சூழலை அழிக்கிறான்; அதே மனிதனாலேயே அந்த சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அது அழிவதைத் தடுக்க முடியும். நாமே நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிலைக்கு நமது சமூகத்தை மேம்படுத்துவோம். Clean Sri Lanka திட்டத்தின் நோக்கம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே ஆகும்.
நமது செயற்பாடுகள் மூலம், நாம் எப்போதும் இந்த நாட்டைப் பின்னோக்கி நகர்த்துவதற்குப் பதிலாக, அபிவிருத்தி அடைந்த நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றிணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என பிரதமர் கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. லக்ஷ்மன் நிபுணாரச்சி, திருமதி. சமன்மாலீ குணசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை ஹதபிம அதிகாரச் சபையின் தலைவர் திரு. ஆர்.டி. சிறிபால, கெபிடல் மஹாராஜா குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு. எஸ்.வி. வீரசேகர, ரத்மலானை இந்து கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு