அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் Sam Mostyn AC அவர்கள், 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்பானது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்தது. பிரதமரால் வரவேற்கப்பட்ட ஆளுநர் நாயகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, குறிப்பாக அரசியல், பொருளாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக் கொண்டிருப்பதற்காக அமுல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர் விளக்கமளித்தார்.
இதன்போது, அவுஸ்திரேலியாவின் கல்வி முறைமை குறித்து ஆளுநர் நாயகம் பிரதமருக்குத் தெளிவுபடுத்தியதுடன், இத்துறையில் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினார். மேலும், இரு தரப்பினரும் பாலின சமத்துவத்துக்கான தமது நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், தலைமைத்துவத்தையும் அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்தோடு, இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்த ஆளுநர் நாயகம், பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
அவுஸ்திரேலிய தூதுக்குழுவில் ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் Gerard Martin PSM, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Paul Stephens, அரச அவுஸ்திரேலிய விமானப்படையின் - Aide-de-Camp - Jamie Thanjan, இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் Lalita Kapur மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதம செயலாளர் Dr. Paul Zeccola ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய, அதே அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Dhawood Amanullah ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு