தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹஜ் பெருநாளானது, இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறைபக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும். தமக்குச் சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றைக் கூட, மனிதகுலத்தின் நன்மைக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும் அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.
இத்தகைய ஹஜ் திருநாளில், நாம் அனைவரும் எமக்கிடையிலான வேற்றுமைகளைக் கடந்து, சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் கடைப்பிடித்து, ஒற்றுமையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தியானது, பலமான, அமைதியான, அதேநேரத்தில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது.
எனவே, குறுகிய வேறுபாடுகளைத் தவிர்த்து, மற்றவர்கள் மீது கௌரவத்தையும் கருணையையும் வெளிப்படுத்தி, அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.
இந்த ஹஜ் பெருநாளானது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், சுபீட்சமும், ஆசீர்வாதமும் நிறைந்ததொரு நன்னாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 28 ஆம் திகதி
