பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர்கள் தொடர்பான சிறிய விடயங்கள் மீதும் உணர்திறனுடன் கவனம் செலுத்துவது முக்கியமானது என்பதையும், மனித நல்வாழ்வைத் தனிமைப்படுத்திக் கட்டியெழுப்ப முடியாது என்பதையும், அது சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
நவம்பர் 24ஆம் திகதி கொழும்பு சிட்டி சென்டர் (Colombo City Centre) வளாகத்தில் நடைபெற்ற ’Contextualising MHPSS: An Encounter with the Field’s History in Sri Lanka’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
2026 நவம்பர் 24 முதல் 26 வரை கொழும்பில் நடைபெறும், நிறுவனங்களுக்கிடையிலான நிலைக்குழுவின் (IASC) மனநலம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு (MHPSS) தொடர்பான குழுவின் வருடாந்தக் கூட்டத்துடன் இணைந்ததாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1980களின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரையிலான சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் நிலவிய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இலங்கையின் MHPSS துறையில் ஏற்பட்ட புத்தாக்கங்கள், சமூக அடிப்படையிலான அணுகுமுறைகள், தலையீடுகள் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியை இக்கண்காட்சி வெளிப்படுத்துகிறது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது:
"1991ஆம் ஆண்டில் NEST நிறுவனத்துடன் இணைந்து சமூகச் சேவைத் துறைக்குள் நுழைந்த எனது ஆரம்பகால அனுபவங்கள் இந்தத் தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றன. சமூகத்தில் மேலோட்டமாகத் தெரியும் விடயங்களுக்கு அப்பால் சென்று, மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் ஆழமான யதார்த்தங்களை இனங்காண்பதற்கு எனது ஆரம்பகால வழிகாட்டிகள் எனக்கு வழிகாட்டிய விதத்தை நான் கௌரவத்துடன் நினைவுகூர்கிறேன். பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உண்மையான நிலைகளையும் அவர்கள் நடத்தப்படும் விதத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், மிகவும் சிறியதாகத் தோன்றும் விடயங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியதுடன், விசேட கவனத்துடனும் உணர்திறனுடனும் அவை குறித்து ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும்.
நபர்களுக்குச் சமூக அங்கீகாரம், கௌரவம், அத்துடன் தொடர்ச்சியான பராமரிப்பு, ஒத்துழைப்பு ஆகியவை அத்தியாவசியமானவை. தனிநபர் மனநலமும் உளவியல் சமூக நல்வாழ்வும் அடிப்படையிலேயே சமூக நீதி, சமத்துவம் என்பவற்றுடனும், அதிகாரமும் வாய்ப்புகளும் பகிரப்படுவதிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைவதுடனும் இணைந்துள்ளன" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில், IASC MHPSS குறிப்புக் குழுவின் இணைத் தலைமைத்துவத்தை வகிக்கும் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்தின் உலகளாவிய மனநலத் தலைவர் சைனாப் ஹிஜாசி (Zeinab Hijazi), சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் (IFRC) மனிதாபிமான இராஜதந்திரம், தொடர்பாடல் மற்றும் ஆராய்ச்சிக்கான தலைவர் கார்மன் வலே-ட்ரபடெலோ (Carmen Valle-Trabadelo) ஆகியோரும், யுனிசெஃப் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைப் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் பாண்டவ் (Dr. Rajesh Pandav), ஆனந்த கலபத்தி ஆகியோரும், நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், சமூகச் சேவையாளர்கள், சமூகப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட, இந்த அனுபவங்களை நேரடியாக எதிர்கொண்ட பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு