எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறைவு விழா 2025.11.15 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, " தேச எல்லைகளைக் கடந்து - இலங்கையர்களை வலுவூட்டல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்திற்கு வசதிகளை வழங்குவதற்காக ஒரு மொபைல் செயலி (Mobile app) அறிமுகப்படுத்தல், ஒரு தொழிலாளி இறந்தால் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 40,000 லிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்துதல், பணியகத்தின் புதிய 24/7 அழைப்பு மைய சேவைகளை ஆரம்பித்தல், வணிகத் துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல், நீண்டகால வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை பாராட்டுதல் மற்றும் புலம்பெயர் பிள்ளைகளுக்கான நிதி உதவித் திட்டத்தைத் தொடங்குதல், ஒரு தொழிலாளி இறந்தால் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 6 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்தல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் தொடங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுக் கடன்களை 10 மில்லியனாக அதிகரித்தல், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குதல் போன்ற பல வசதிகள் செயற்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து பொருளாதாரத்திற்கு நிதி பங்களிப்பு, புதிய தொழில்முனைவோர் வாய்ப்புகளுக்கு அவர்கள் வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டினார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
40 ஆண்டுகால வரலாற்றில், இந்தத் துறையில் நாம் இப்போது நவீன மற்றும் சிறந்த காலகட்டத்தை அடைந்துள்ளோம்.
வெளியுறவு விவகாரங்கள் பற்றி குறிப்பிடும் போது இனி முன்பிருந்த பழைய பிம்பத்தை காணமாட்டோம். மாறாக, அது இப்போது ஒரு முற்போக்கான, நியாயமான, நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக பங்களிக்கும் துறையாக உருவாகி வருகிறது.
பயிற்றப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நெறிமுறைசார் புலம்பெயர் பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பை பிரதமர் இதன் போது வலியுறுத்தினார். எமது மனித வளத்தை மதிப்பும் தேவுயம் உள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பும் நமக்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் வழங்கும் ஆதரவை குறிப்பாகப் பாராட்டிய பிரதமர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு தூதரகங்களிடமிருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் தொழிலாளர்களை முறையாக வெளிநாடுகளுக்கு அனுப்புதல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சம்பளத்தை உறுதி செய்தல், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டால் தேவையான பொறிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உட்பட, அவர்களின் வேலைகள் மற்றும் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொறுப்பு மற்றும் வகைகூறல் பற்றி விளக்கினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இலங்கையர்களுக்கு வெளிப்படையான, நியாயமான மற்றும் நெருக்கமான சேவையை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
100% பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே எங்கள் முயற்சியும் குறிக்கோளும் ஆகும். இலங்கையர்களை உயர் மட்ட வேலைகள் மற்றும் தொழில்சார் வேலைகளுக்கு அனுப்புவது எங்கள் குறிக்கோள் மற்றும் பொறுப்பாகும்.
இலங்கை வரலாற்றில் அதிக அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்த ஆண்டு 2025 என்று நாம் பெருமையுடன் கூறலாம். இந்த 40வது ஆண்டு நிறைவை, அதிக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் கொண்டாடுகிறோம். ஆனால் நாட்டின் குறிக்கோள், வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், நாட்டிற்குள் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், அனைவரும் வாழ விரும்பும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுமாகும். அந்த நோக்கத்தை மனதில் கொண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக ஒரு அரசாங்கமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளையும் விளக்கினார்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, தூதுவர்கள், மேல் மாகாண ஆளுநர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெளிநாட்டு சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
பிரதமர் ஊடகப் பிரிவு