ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் பக்திபூர்வமாகக் கொண்டாடும் ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
ரமழான் காலம் என்பது வெறுமனே உணவையும் நீரையும் தவிர்ப்பது மட்டுமல்ல, பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப் பண்புகளை வாழ்வோடு இணைத்துக்கொள்ளும் ஒரு காலமாகும். இந்த உயரிய விழுமியங்களைத் தனிப்பட்ட வாழ்வோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாது, நாட்டின் பொதுநலனைக் கருதிப் பயன்படுத்துவதே இன்று எமக்கு முன்னுள்ள முக்கிய தேவையாகும்.
நமது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை எமக்கு ஒரு பலமாகும். ரமழான் பெருநாள் எமக்குக் கற்றுத்தரும் சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய பாடமானது, இலங்கையர் என்ற வகையில் ஒரே கொடியின் கீழ் அணிதிரள எம்மை ஊக்குவிக்கிறது. சமய மற்றும் கலாசாரப் பிணைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம், இனங்களுக்கிடையே கட்டியெழுப்பப்படும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தை அடித்தளமாகக் கொண்ட அஸ்திவாரத்தின் மீதே நாட்டின் நிலையான சமாதானமும் சுபீட்சமும் தங்கியுள்ளன.
நாம் இவ்வாறு சகோதரத்துவத்துடன் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் நிலவும் யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும். குறிப்பாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் எதிர்நோக்கியுள்ள மிகக் கடினமான மற்றும் வேதனையான நிலை குறித்து நாம் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மனித உரிமைகளும் மனிதாபிமான விழுமியங்களும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், போரின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதும், அப்பிராந்தியங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதும் ஒட்டுமொத்த உலகச் சமூகத்தினதும் பொறுப்பும் பிரார்த்தனையுமாகும்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் தனிமைப்பட விடாது, பரஸ்பரம் உதவி செய்து சகோதரத்துவத்துடன் செயற்படுவது சமூக ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான அடித்தளமாகும். ரமழான் பெருநாள் மூலம் வெளிப்படுத்தப்படும் இந்த ஆன்மீக ஒழுக்கம், தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு ஒரு நாடு என்ற வகையில் சுபீட்சத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தன்னிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்கி (ஸகாத்), சமூக நீதியை நிலைநாட்டும் இந்த உன்னத நாளில், அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் சிறந்த, ஒத்துழைப்புமிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம். இந்த ரமழான் திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் இனிய ரமழான் தின வாழ்த்துகள்!
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026, மார்ச் 21
