இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

’திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில் சர்வதேசச் சமூகம் வழங்கிவரும் ஆதரவையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கசகஸ்தானின் முதலீட்டை அதிகரித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். கல்வித் துறையில், குறிப்பாக மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டுக் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பரஸ்பர கரிசனைக்குரிய ஒரு பகுதியாக அமைந்தது.

கசகஸ்தான் குடியரசின் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தூதரகக் குழுவின் தலைவர் ருஸ்தெம் ஜமன்குலோவ் (Rustem Jamankulov) கலந்துகொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சமரி ரொட்ரிகோ, மற்றும் வெளியுறவு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. இரோஷா கூரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு