எமது சமையற்கலைஞர்கள் வெறும் சமையல் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மரபுரிமையின் தூதர்களும் ஆவர். அவர்கள் பரிமாறும் ஒவ்வொரு உணவிலும், மணமூட்டும் பொருள், இடம் மற்றும் விருந்தோம்பலின் கதையை எடுத்துச் செல்கிறார்கள். – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற SIRHA BOCUSE D’OR இலங்கை 2025 விருது வழங்கும் விழாவில் உரையாற்றும்போது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இது வெறும் உணவைப் பற்றியது அல்ல. இது சிறப்பைப் பற்றியது, மரபுரிமை பற்றியது, அடையாளம் பற்றியது. இலங்கைக்கு, இந்த உலகளாவிய பயணத்தில் எமது பங்கேற்பு, சமையல் கௌரவத்தை விடவும் அதிகமானது.

இது சர்வதேச உரையாடலின் மையத்தில் நம்மை நிலைநிறுத்துவதாகும். அது படைப்பாற்றல், கைவினை மற்றும் கலாச்சார வெளிப்பாடு பற்றிய உரையாடலாகும். 2011 முதல், நாங்கள் முதன்முதலில் எங்கள் சமையல் தூதர்களை உலக அரங்கிற்கு அனுப்பியதிலிருந்து, எமது பயணம் அர்ப்பணிப்பு, தொலைநோக்கு மற்றும் எமது உள்ளார்ந்த ஆற்றல் பற்றிய வலுவான நம்பிக்கையால் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மேடையில் இலங்கையின் பிரசன்னம் தற்செயலானது அல்ல. இது எமது விருந்தோம்பல் துறையின் முன்னேற்றம், எமது சமையல் கல்வி மற்றும் எமது தேசிய குறிக்கோளைப் பிரதிபலிக்கிறது.

இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முக்கியமான பொருளாதாரத் துறைகள் மட்டுமல்ல. அவை நாம் யார் என்பதன் பலம் வாய்ந்த வெளிப்பாடுகளும் ஆகும். ஒவ்வொரு மறக்க முடியாத உணவு அனுபவமும், அது ஒரு சொகுசு ஹோட்டலில் பரிமாறப்பட்டாலும் அல்லது எளிய உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்டாலும், எமது அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை, உலகளாவிய நற்பெயரை உருவாக்குவதோடு மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குகிறது.

இலங்கைக்கு, Bocuse D’Or ஒரு பிரதிபலிப்பும் வழிகாட்டியும் ஆகும். நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது, அதே போன்று எமது முன்னோக்கிய பாதையை வடிவமைக்க உதவுகிறது. எமது பங்கேற்பு தரங்களை உயர்த்தியுள்ளது, உலகளாவிய குறிக்கோளை ஊக்குவித்துள்ளது மற்றும் புதிய தலைமுறை இலங்கை விருந்தோம்பல் நிபுணர்களிடையே சிறப்புத் தன்மை பற்றிய உணர்வை ஊக்குவித்துள்ளது.

பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு துறையில் இவ்வளவு பெண் சமையற்கலைஞர்கள் பங்கேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையின் சமையல் துறையில் வலுவான பெண் தலைமைத்துவம் வளர்ந்து வருவதைக் காண்பது ஊக்கமளிக்கிறது."

விழாவின் போது, சின்னமன் லைஃப் ஹோட்டலுக்கு தங்கப் பதக்கமும், ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு வெள்ளிப் பதக்கமும், ஷெரட்டன் ஹோட்டல் கொழும்புக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமையல் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு