நிலையான பொருளாதாரத்திலிருந்து மாற்றத்துக்கான பொருளாதாரத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்வதற்குத் தேவையான முதலீடுகள் 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டை பொறுப்பேற்கும்போது நிலவிய நெருக்கடியான நிலைமையை மாற்றி, நிலையான பொருளாதாரத்திலிருந்து மாற்றத்துக்கான பொருளாதாரத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்வதற்குத் தேவையான முதலீடுகள் 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2027 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாகக் கல்வித் துறையின் மூலதனத்திற்காகப் பாரிய முதலீட்டை மேற்கொண்டு, 2027ஆம் ஆண்டிற்காக 749 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். இது மொத்த அரச செலவினத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமான தொகையாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போது 4,570க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு Smart Boards வசதிகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், 17 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், மகரகம கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட மேலும் ஐந்து கல்வியியல் கல்லூரிகளில் Smart வகுப்பறைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். 2016 முதல் 2025 வரையான கடந்த தசாப்த காலத் தரவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், 2025ஆம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையாகும் என்றும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைப் புள்ளிவிபரங்கள் மூலம் தெளிவுபடுத்திய பிரதமர், 2025ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாகப் பேண முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டில் நேர்மறையான முதன்மை நிதி மீதியைப் பதிவு செய்ய முடிந்துள்ளதாகவும், 2026 வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்பார்க்கப்பட்ட நேர்மறையான முதன்மை நிதி மீதி 360 பில்லியன் ரூபாவாக இருந்தபோதிலும், செப்டம்பர் மாத இறுதியில் அது 1,844 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீதமாகக் காணப்பட்ட மத்திய அரசாங்கத்தின் கடன் தொகை, 2025ஆம் ஆண்டின் இறுதியில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் 74.6 பில்லியன் ரூபா மொத்த நிகர நட்டத்தைப் பதிவு செய்திருந்த 52 பிரதான அரச தொழில்முயற்சிகளைத் தற்போது இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். உலகப் பொருளாதார மன்றத்தினால் சுற்றுலாப் பொருளாதாரங்கள் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கிடையில் இலங்கை 10ஆவது இடத்திற்குத் தரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச சேவை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, தகுதியானவர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் வெளிப்படையான நடைமுறையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் முடங்கியிருந்த இந்தச் செயன்முறையின் கீழ், ஏற்கனவே சுமார் 40,000 ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அரச ஊழியர்கள் அரசியல் அழுத்தங்களின்றி, தலைநிமிர்ந்து கௌரவத்துடன் பணியாற்றக்கூடிய சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, விமர்சனங்கள் உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான அறிவுபூர்வமான கலந்துரையாடலின் ஊடாகவே முன்வைக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கட்சி வேறுபாடுகளைக் களைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியப் பணியில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு