பிராந்திய கலை, கலாசாரம், மரபுரிமைத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களை ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கலாசார மையத்தினால் (SCC) ஏற்பாடு செய்யப்பட்ட SAARC மரபுரிமை மன்றம் 2025 அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (செப்டம்பர் 30) கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கலந்துகொண்டார். இந்த மன்றம் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 02 வரை நடைபெற இருக்கின்றது.
SAARC மரபுரிமை மன்றம் 2025, தொல்லியல், கலாசாரப் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகத் துறைசார் நிபுணர்கள், வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து, தெற்காசியாவின் வளமான கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்கும், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், புத்தாக்க அணுகுமுறைகளை ஆராய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அதன் செயல்பாட்டுக் கொள்கைகளுடன் SAARC மரபுரிமைப் பட்டியலை நிறுவுதல் மற்றும் முக்கிய பௌத்த வரலாற்றுத் தளங்களை இணைப்பதோடு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பிற மதங்களுடன் தொடர்புடைய புனிதத் தளங்களுக்கான தொடர்பை எளிதாக்கும் கலாசாரக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்த நோக்கங்களை அடையலாம்.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், SAARC அமைப்புடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், பிராந்திய ஒற்றுமை, பிராந்தியத்தின் பலம் மிக்க தன்மை மற்றும் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்தல், அதனை இலக்காகக் கொண்டு செயல்படுதல் ஆகிய தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அத்தோடு, இம் மன்றத்தின் நடவடிக்கைகளை சுழற்சி முறையில் தலைமைத்துவம் மூலம் தொடர்ச்சியான பங்கேற்புடன் கூடிய வருடாந்த நிகழ்ச்சித் திட்டமாக நிறுவனமயமாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதற்கான உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
இந்த மன்றத்தின் நோக்கத்தையும் பலன்களையும் யதார்த்தமாக்குவதற்கு இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் சேனவி அவர்கள், எமது கலாசாரச் சொத்துக்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக மாத்திரமின்றி, நமது அடையாளம், எமது குரல் ஆகியன உள்ளடங்கிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் வளங்களாகவும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் சேனவி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஃபஹீம்-உல்-அஜீஸ், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்தலிப் இலியாஸ், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், நேபாள தூதுவர் பூர்ணா பகதூர், SAARC அமைப்பின் பிரதிநிதிகள், SAARC கலாசார நிலையத்தின் (SCC) பணிப்பாளர் கலாநிதி கௌசல்யா குமாரசிங்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள், மற்றும் துறைசார் வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமரின் ஊடகப் பிரிவு