சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், சிறுவர் சித்திரவதைக்கு எதிரான சட்டம் என்பது வன்முறைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டமே தவிர, ஒழுக்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் "உலகை வழிநடத்த - அன்பால் எம்மைப் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின விழாவில் கலந்துகொண்டு, இன்று (01) அலரி மாளிகையில் பிரதமர் இதனைக் தெரிவித்தார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரைப் பதித்த தபாலுறை வெளியிடப்பட்டது.
விழாவில் உரையாற்றிய பிரதமர்,
"நமது நாட்டின் சிறுவர் சனத்தொகையானது எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 31% விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அவர்களுக்காக ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.
இந்த வருட உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருள் "உலகை வழிநடத்த - அன்பால் எம்மைப் போஷியுங்கள்" என்பதாகும். உண்மையிலேயே குழந்தைகளுக்காக நாம் செய்ய வேண்டிய முதன்மையானப் பணி, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதே ஆகும்.
நான் இங்கே குறிப்பிடும் பாதுகாப்பு என்பது சிறுவர்கள் எந்தப் பின்னணியில், எந்த நிலைமையில் வாழ்ந்த போதிலும் அந்த அனைத்துச் சிறுவர்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்து, எந்தச் சிறுவரையும் கைவிடாமல், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அதேபோன்று உளவியல் ரீதியாகவும் அவர்களுக்குப் பாதுகாப்பான அதேவேளை சிறுவர் நேயச் சூழலில் சுதந்திரமாக வாழும் வாய்ப்பை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாகும்.
"பாதுகாப்பான குழந்தைப் பருவம் - படைப்பாற்றல் மிக்க எதிர்காலச் சந்ததி" எனும் எண்ணக்கருவைக் கொண்ட ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாம் ஏற்கனவே சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
குறிப்பாக, கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடகாலமாக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சானது சிறுவர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றியும், குழந்தைகளின் நல்வாழ்வுக்கான கொள்கைகள், மூலோபாயத் திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுத்தும், அவற்றைப் பின்தொடர்ந்து மதிப்பீடு செய்தும் சிறுவர்களுக்கென பெருமளவு பணியினை ஆற்றி வருகின்றது.
அதற்கு அமைய கடந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், நிறுவனப் பராமரிப்பு மற்றும் பொறுப்பின் கீழ் வாழுகின்ற சிறுவர்கள் மற்றும் தெரு வாசிகளாக வாழ்ந்து வரும் சிறுவர்களுக்காக மாதாந்தம் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் திட்டம், பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் பாதுகாப்பான விதத்தில் சாட்சியம் அளிக்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளைக் கொண்ட சாட்சி அறைகளை அமைத்தல் போன்ற மிக முக்கியமான தீர்மானங்களை இந்த ஆண்டில் இதுவரை செயல்படுத்தி இருக்கின்றோம்.
அதேபோல், சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகலவித வன்முறைகளையும் ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்குரிய விடயமாக இருந்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே சிறுவர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்துவது குறித்த சட்ட வரைவு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. அச்சட்ட வரைவு குறித்து பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் எழுந்திருக்கின்றன. அது ஒரு நல்ல விடயம். சட்டங்களை இயற்றும்போது இவ்வாறான விவாதங்களும், கருத்துப் பரிமாறல்களும் கட்டாயம் ஏற்படவே செய்யும், ஏனெனில் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருந்தாத சட்டங்களை உருவாக்குவதில் பயனில்லை.
இருப்பினும், இந்த விவாதங்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். சித்திரவதைச் சட்டத்தை திருத்துவதன் நோக்கம் வன்முறைக்கு எதிராகச் செயல்படுவதே தவிர, ஒழுக்கத்திற்கு எதிராகச் செயல்படுவது அல்ல. குழந்தைகள் தவறு செய்தால், சமூகத்தில் தவறாக நடந்தால், அவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவர பெரியவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தலையிடுவார்கள்.
சிறுவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்குப் பெரியவர்கள் சிறுவர்களைச் சித்திரவதை செய்வதில்லை. ஒழுக்கத்தைப் பேணுவதற்காகப் பாடசாலைகளில் சித்திரவதை செய்யப்படுவதாக நான் நம்பவில்லை. அத்தோடு இந்தச் சட்டமானது பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு எதிராகத் உருவாக்கப்பட்டதல்ல.
சிறுவர்களைத் தவறுகளிலிருந்து காப்பாற்றும், பெரியவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சிறையில் அடைக்க நாம் தயாராக இல்லை. வழி தவறும் சிறுவர்கள் சிறைக்குச் செல்வதைத் தடுப்பதே எமது நோக்கமாகும்.
மனித நேயம் மிக்க, அன்பான ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் திறமையான, உணர்வுபூர்வமான சிறுவர்கள் தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், மற்றும் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு