தொழில் சந்தைக்குப் பொருத்தமான விதத்தில் தொழில் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில் சந்தையை இலக்கு வைத்தே தொழிற்கல்வி ஊக்குவிக்கப்படுகிறது.

மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நவீன உலகின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கேற்ப தொழில் சந்தையை இலக்கு வைத்து தொழிற்கல்வித் துறையை ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம் எனும், ஜப்பான் டெக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை இடம்பெற்ற 31ஆவது சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம் நடத்திய பரீட்சையில் அதிக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜப்பான் டெக் நிறுவனம் இலங்கையின் மோட்டார் வாகனப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியதோடு, இளைஞர், யுவதிகளின் வேலையின்மைப் பிரச்சினையைக் குறைப்பதற்கு தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது எனக் கூறினார்.

தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உரிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கின்றதா? அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது எந்த நிலையில் உள்ளது? போன்ற விடயங்களில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"இன்று இந்தச் சான்றிதழைப் பெற்ற நீங்கள் கல்வியையும் தொழில் பயிற்சியையும் பெற்ற குடிமகனாகவே இவ்விடத்தை விட்டு வெளியேறுகிறீர்கள். ஆகையினால் இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்ற வகையில் நீங்கள் உங்கள் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். இவ்வாறான பயிற்சியைப் பெறுவது உங்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இந்த வரப்பிரசாதத்தைப் பெற்ற நீங்கள், இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றவும், நாட்டின் அபிவிருத்திக்கு வினைத்திறன் மிக்க வகையில் உங்களது பங்களிப்பை வழங்கத் தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அதன் மூலம், நாம் அனைவரும் வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையும் உருவாக்க ஒன்றிணைவோமென உங்களை அழைக்கிறேன்" எனவும் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல உரையாற்றுகையில், அபாயகர ஔடத மையங்கள் மூலம் புனர்வாழ்வு பெறும் இளைஞர், யுவதிகளைப் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் தொழிற்கல்விப் பாடநெறிகளைக் கற்பதற்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, புதிய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுத்துவரும் பாரிய வேலைத்திட்டங்களுக்கு, இவ்வாறான கற்கை நெறிகளைப் பயின்று பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றதெனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானின் பிரதித் தூதுவர் Naoaki Kamoshida, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதம பிரதிநிதி Kenji Kuronuma, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) தலைவர் Abdul Sattar, மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் D.L.A.K. Dissanayake, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் Himali Athauda ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் விரிவுரையாளர்கள், சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு