ஆகஸ்ட் 18 அன்று கடுவெல புராதன சங்கபிட்டி விகாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு, அதற்கான பிரகடன பத்திரத்தை அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தலைமை தேரரிடம் வழங்கினார்.

பிரகடன பத்திரத்தை வழங்கிய பின்னர் உரையாற்றிய பிரதமர்,

"இன்று இந்த விகாரைக்கு ஒரு சிறப்புவாய்ந்த நாள். கடுவெல, கொத்தலாவல கிராமத்தில் அமைந்துள்ள சங்கபிட்டி புராதன ரஜமகா விஹாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி பிரகடன பத்திரம் எமது தலைமை தேரரிடம் வழங்கப்பட்டது.

மேலும், இன்று இந்த விகாரையின் தற்போதைய தலைமைத் தேரரான அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தேரரின் பிறந்தநாள். அவர் நீண்ட காலம் தர்மத்திற்குச் சேவை செய்ய, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

"இந்த பழமை வாய்ந்த பௌத்த விகாரையில், கம்பளை மற்றும் கோட்டை காலத்தைச் சேர்ந்த பண்டைய ஓவியங்கள் மற்றும் சிலைகள் இருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று, நமது வரலாற்று பாரம்பரியத்தின் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை என் கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை சமூகத்தின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு மிக முக்கியமானவை. நமது பாரம்பரியங்களே எதிர்காலத்திற்கான வலிமையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன. நமது நாட்டின் பாரம்பரியத்தின் மதிப்புகளை மக்கள் மதிக்கும் வகையில் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பொறுப்பாகும்.

அதனால்தான் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பிரதம பதிவாளர் சங்கைக்குரிய பலப்பிட்டியே சிறி சீவலி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சர் காம கெதர திசாநாயக்க, கடுவெல மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜயலால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள், விகாரை நிர்வாகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு