உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருகிறது. அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது.

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடுவெல மற்றும் தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபைகளை மையமாகக் கொண்டு இன்று (03) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

நாங்கள் நாட்டைப் பொறுப்பேற்றபோது நாட்டின் நிலைமை உங்களுக்குத் தெரியும். வெறும் அரசியல் கலாசாரம் மட்டுமல்ல, அரச சேவையிலும் இதேபோன்ற மாற்றம் தேவை. நாங்கள் இப்போது அதைச் செய்துவருகிறோம்.

வெள்ளத்திற்கு எம்மிடம் உள்ள ஒரே தீர்வு நிவாரண சேவைகளை வழங்குவதுதான். நடக்க வேண்டியது அதுவல்ல. வெள்ளத்தைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் எமக்கு திட்டங்கள் தேவை. நாட்டின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதுதான் நடந்துள்ளது. மேலோட்டமான தீர்வுகளையே நாடுகிறார்கள், பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கவில்லை. அரசாங்க சேவையும் அதற்குப் பழக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் நிறைந்த ஒரு கலாசாரம் ஒரு சரியான முறைமையாக மாற்றப்படும்போது, அந்த முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, இந்த மாற்றம் நடக்காமல் தடுக்க பல்வேறு தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

எப்படியிருந்தாலும், இந்த நாட்டை தற்போதிருக்கும் முறைமையுடன் முன் கொண்டுசெல்ல முடியாது. தவறான வழிமுறைகளால்தான் இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சரிந்தது. அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றி திட்டமிட்ட முறைமையை செயற்படுத்தி வருகிறது, அதனால்தான் பொருளாதாரம் இப்போது ஓரளவுக்கு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கும் வகையில் இந்த முறைமைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்மானங்கள் ஐரோப்பாவையும் ஆசியாவையும் கொந்தளிப்பான நிலைக்கு தளிளியுள்ளன. இந்த இந்த நாடுகள் தான் பொருளாதாரத்தை இயக்குகின்றன என்ற நமது பாரம்பரிய நம்பிக்கை மாறி வருகிறது. ஆனால் அந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருகிறது. அப்படியானால் அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். அதற்கு, எமது நாடு தனது சர்வதேச உறவுகளை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாம் வெளிப்படைத் தன்மையுடன் முறைமைகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ஸ்திரமான நிலைக்கு மாறுவதே எமது குறிக்கோள்.

ஆசிரியர் வெற்றிடங்களை இன்னும் நிரப்ப முடியவில்லை. திட்டமிடாமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமையால் ஏற்கனவே ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் மேலோட்டமாக தீர்க்கப்பட்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை முறையாக தீர்க்கப்படவில்லை. மற்றுமொரு அரசாங்கத்திற்கு இனி எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு நாம் ஒரு முறைமையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் புலமைப் பரிசில் பெறுவது பற்றியது அல்ல, மாறாக சிறந்த வசதிகள் கொண்ட பாடசாலைக்கு ஒரு பிள்ளையை மாற்றுவது பற்றியதாகும். இதைத் தீர்க்க, பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழவுகள் நீக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போது நாம் மேற்கொண்டுவருகிறோம். அரசாங்கம் இதையெல்லாம் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தி வருகிறது.

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் கண்டறிந்து, குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை உருவாக்கி வருகிறோம். சர்வதேச நம்பிக்கையைப் பெற்று, முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறோம். நாங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறோம்.

முன்னர் இருந்த அரசியல் கலாசாரம், பொலீஸார் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதற்கு பெரும் தடைகளை உருவாக்கியது. இப்போது அந்த நிலைமைகள் சீராகி வருகிறது.

சிறந்த அரசியல் கலாசாரத்திற்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு