பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வென்று ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கத் தேவையான நிலையான கொள்கைகள் உருவாக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், "Gem City Ratnapura- 2025" எனும் தலைப்பில் 2025 ஆகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன், பல்வேறு வகையான இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள், ஆய்வக சேவைகள், களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இலங்கை இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. அத்துடன், இந்த இரத்தினக்கற்களில் பெரும் பகுதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. எனினும், இரத்தினபுரிக்கு அந்த கௌரவம் கிடைத்துள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயர்தர இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினக்கல் துறை தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது.

இருப்பினும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையிலிருந்து உள்ளூர் ஏற்றுமதி வருமானத்திற்கு நாம் அளிக்கக்கூடிய உச்சபட்ச பங்களிப்பினை இன்னும் அடையவில்லை. பொருத்தமற்ற கொள்கைகளே இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றன. ஆகையால், இரத்தினக்கல் துறையின் இலக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டத் தேவையான நிலையான கொள்கைகளை உருவாக்க எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும்

இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி மூலம் எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற கடினமான இலக்கை அடைவதற்கு, வைரக்கல் துறையின் வளர்ச்சி மற்றும் பட்டை தீட்டப்படாத இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல புதிய கொள்கைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முதலாவது அரச வர்த்தக இணையதளமாகிய www.gemcityratnapura.com என்ற இணையதளம், GOV PAY என்ற புதிய வசதியுடன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீபாதஸ்தானதிபதி பென்கமுவே தம்மதின்ன மஹா நாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்படப் பல அரச அதிகாரிகளும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வர்த்தகர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதற்கு, தொழிற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்.

தொழிற்கல்வியை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற "Sri Lanka Skills Expo 2025" கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவிவரும் இளைஞர்களின் வேலையின்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சியை, மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை கைத்தொழில்துறை திறன்கள் பேரவையும் (ISSC) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

பிரதமர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்:

"தற்போதைய கல்வி முறையின் கீழ், மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகப் பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். அந்தப் பாடங்களைப் கற்பதற்கு போதுமான தகைமைகள் இல்லாத பிள்ளைகள் கலைத்துறை பாடங்களைத் தேர்வு செய்கிறார்கள்." அவர்களில், சித்தியடையத் தவறும் மாணவர்கள்தான் தொழிற்கல்வியை நோக்கித் திரும்புகிறார்கள். தொழிற்கல்வி என்பது அத்தகைய தோல்விகளுக்குப் பின்னர் திரும்ப வேண்டிய ஒரு துறை அல்ல. அது மாணவர்கள் தேர்வாக இருக்க வேண்டும்.

எமது கல்வி சீர்திருத்தங்களில் நாம் அடைய எதிர்பார்க்கும் நோக்கம், மாணவர்கள் 10 ஆம் வகுப்பை அடையும் போது அவர்கள் எந்தத் தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவை அவர்களுக்கு வழங்குவதும், அந்தப் பாதையை நோக்கி அவர்களை வழிப்படுத்துவதும் ஆகும்.

தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது, எமக்குப் பல்வேறு தொழில்முறை அறிவு கொண்ட மனித வளம் தேவை. எனவே, அந்த மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனையும், நெகிழ்வுத்தன்மையையும், அறிவையும் எமது பிள்ளைகளுக்கு நாம் தொடர்ந்து வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு அறிவை வழங்குவதைப் போலவே, அவர்களை மனித நற்பண்புகள் நிறைந்தவர்களாக மாற்றுவதும் அவசியம்.

புதிய உலகிற்குள் பிரவேசிப்பதற்கு தொழிற்கல்வி அவசியம் என்பதால், எமது கல்வி சீர்திருத்தங்களில் தொழிற்கல்விக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

"இந்த கண்காட்சியின் மூலம் பிள்ளைகள் பல்வேறு தொழில்களைப் பற்றிய சிறந்த விளக்கங்களைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில்துறை துறை திறன்கள் பேரவை (ISSC) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமையுடன்(NEMIS) மாகாணக் கல்வித் தகவல் முறைமையை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதமரின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள செயலணியினால், தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் (NEMIS) மாகாணக் கல்வித் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்ற ஆகஸ்ட் (12) அலரிமாளிகை வளாகத்தில், பிரதமர் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமான தூரப்பிரதேசப் பாடசாலைகளுக்கு டிஜிட்டல்மயமாக்கல் மூலம் கல்விக்குச் சமமான அணுகலை வழங்குதல், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் வளங்கள் விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதன் மூலம் கல்விக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குதல், கல்வியை டிஜிட்டல்மயமாக்குவதற்கு மாகாண மட்டத்தில் தற்போது பயன்படுத்தப்படும் முறைமைகள் மற்றும் அவை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்களை அடையாளம் கண்டு, தேசிய மட்டத்தில் வினைத்திறனான முறைமை ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,

டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், டிஜிட்டல் தீர்வுகள் கொள்முதலில் முறையான நடைமுறைகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களினால் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பாடசாலைகள் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களில் டிஜிட்டல் தீர்வுகளின் பயன்பாடு குறித்த தரவுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் கல்விச் செயற்பாடு தொடர்பாக தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமரின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, பிரதமரின் மேலதிக செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப், செயலணி உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் NEMIS திட்டத்துடன் இணைக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகள், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்விச் செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச்செல்லும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் 2025 ஆகஸ்ட் 11 ஆந் திகதி இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

உயர் ஸ்தானிகரின் பதவிக் காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார். கனடாவின் கல்வி முறை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்த உயர் ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.

கனேடிய தூதுக்குழுவில் இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் Gwen Temmel மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் பேட்ரிக் பிக்கரிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி பிரமுதிதா மனுசிங்க ஆகியோர் இந்தக் சந்திப்பில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியதோடு, கல்வித் துறைசார் அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் திட்டமிடல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களின் தேவையையும் அவர் வெளிப்படுத்தினார்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம் குறித்தும், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்த இருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தியத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக, பெருந்தோட்டப் பாடசாலைத் திட்டங்கள், ஸ்மார்ட் (smart)வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

கல்வித் துறையில் தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்ற இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புப் பிரிவின் இரண்டாம் நிலை செயலாளர் அசோக் ராஜு, வணிகப் பிரிவின் முதலாம் நிலை செயலாளர் Surabh Sablok, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்திற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் Sam Mostyn AC அவர்கள், 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பானது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்தது. பிரதமரால் வரவேற்கப்பட்ட ஆளுநர் நாயகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, குறிப்பாக அரசியல், பொருளாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக் கொண்டிருப்பதற்காக அமுல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர் விளக்கமளித்தார்.

இதன்போது, அவுஸ்திரேலியாவின் கல்வி முறைமை குறித்து ஆளுநர் நாயகம் பிரதமருக்குத் தெளிவுபடுத்தியதுடன், இத்துறையில் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினார். மேலும், இரு தரப்பினரும் பாலின சமத்துவத்துக்கான தமது நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், தலைமைத்துவத்தையும் அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அத்தோடு, இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்த ஆளுநர் நாயகம், பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அவுஸ்திரேலிய தூதுக்குழுவில் ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் Gerard Martin PSM, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Paul Stephens, அரச அவுஸ்திரேலிய விமானப்படையின் - Aide-de-Camp - Jamie Thanjan, இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் Lalita Kapur மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதம செயலாளர் Dr. Paul Zeccola ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய, அதே அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Dhawood Amanullah ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு