பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

The objective of the government is to make Sri Lanka a country with the lowest electricity prices in the region, ensuring fair and affordable electricity for all citizens. - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the objective of the government is to make Sri Lanka a country with the lowest electricity prices in the region, thereby providing fair and affordable electricity to all citizens.

The Prime Minister made these remarks while attending the opening of the ’Sobadhanavi’ 350 MW Combined Cycle Power Plant in Kerawalapitiya, which contributes 12% of the requirement of the national power system.

The Prime Minister further stated:

The world is now moving into a transitional era led by sustainability and innovation, adapting to ever-changing consumer demands and regulatory frameworks in the energy sector.

Amidst such global trends, Sri Lanka ranks high among the countries in the region with the most expensive electricity rates.

One of the main obstacles in transitioning to a production-based economy, in order to recover from the severe economic crisis caused by decades of mismanagement, is the unfair cost of energy.

Our government is focusing on new energy sectors, particularly solar and wind power, in order to reduce high electricity costs.

To make Sri Lanka the country with the lowest electricity prices rates in the region, the Government is implementing procurement and tender processes and shifting from oil-based electricity generation towards renewable sources such as solar and wind.

It is also a goal of the Government to strengthen the national economy by encouraging contribution from producers and provide fair and affordable electricity to all citizens .

I am pleased to learn that this power generation system has been designed by the efforts of our local engineers and human resources.

I humbly request all citizens to use electricity more responsibly, reduce unnecessary consumption, and contribute to strengthening the national economy both institutionally and individually.

Addressing the gathering, Minister of Power and Energy Eng. Kumara Jayakody stated:

The construction of renewable power plants has at times been hindered by certain political motives. In line with our Government’s policy, we are proceeding with the necessary procurements in a proper and transparent manner. We must pay attention to the future of the power sector. As coal power plants can no longer be used, we must also think of the alternatives available to us.

Human resources of our country have received an international recognition. However, we have not been able to fully utilize these talents within our own country. Many Sri Lankans perform exceptionally well abroad, yet when they return to serve here, they face numerous challenges.

The real issue in this country is the failure to properly manage these resources. We are aware of this, and therefore we are taking steps to prioritize and empower local human resources. In order to enter the global platform, our human resources must be strengthened.

The Government initiates in restructuring the Ceylon Electricity Board. Opportunities must be created for new knowledge. We have seen many institutions where those at the top positions never provide opportunities for new knowledge and this must change.

We are not subjecting CEB employees to any political interference. What we ask is simply for them to work efficiently. There are many structural issues within the CEB. Through restructuring, we will create an environment where everyone can work with professional dignity. However, some may create problems for political gain. Even today, a small group made an unsuccessful attempt. While safeguarding rights, we remind everyone not to deceive workers with lies and misuse politics.

The event was attended by the Deputy Minister of Labour Mahinda Jayasinghe, Kaduwela Mayor Ranjan Jayalal, Vice Chairman of CEB Prof. Saliya Jayasekara, and U.D. Jayawardena, founder of LTL Holdings, along with several others participants.

Prime Minister’s Media Division

பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்ற இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது பொலிஸ் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார்.

இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சச்சித்ரா ஜெயகாந்தன், சிறந்த வீரர்களான டி.ஜி.எஸ். விஜேதுங்க, A.M.N. பெரேரா, P.P. ஹேமந்த ஆகிய வீரர்களுக்கும், ஒட்டுமொத்தப் போட்டியின் பிரதமரின் சவால் கேடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான ஜனாதிபதியின் சவால் கேடயத்தை காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கும் பிரதமர் வழங்கிவைத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள்,

"விளையாட்டு என்பது, பங்கேற்றல் மற்றும் வெற்றி ஈட்டுதல் மாத்திரமல்ல, ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் புத்திசாலித்தனமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாகும்.

வெற்றி புகழையும், நன்மதிப்பையும் பெற்று தருகின்ற அதேவேளை பங்கேற்றல் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கி, ஒழுக்கமான, வலிமையான ஆளுமையும் சிறந்த மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகின்றது.

பொதுமக்களுடன் பணியாற்றும் பொலிஸ் சேவைக்கு ஒழுக்கம், ஆளுமை மற்றும் சிறந்த மனநிலை இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆகையினால், பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி தேசிய மட்டத்திலான வீரர்களை உருவாக்குவதற்கும், உங்களது தொழிலின் கௌரவத்தையும் மேம்படுத்துவதற்கும், தொழில்சார் மதிப்பை மேம்படுத்துவதற்கும் உதவும் என நான் நம்புகிறேன்.

இலங்கையைப் போன்ற கனவுகள் சிதைந்திருந்த ஒரு நாடு விளையாட்டுத் துறையில் சாதிக்கக்கூடிய பல விடயங்கள் இருந்த போதிலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த காலத்தில், நமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு குறிப்பிடத்தக்க மட்டத்தில் இருந்தது. ஆயினும் அண்மித்த வரலாற்றில் கிரிக்கெட் விளையாட்டும் ஒருவித பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

விளையாட்டின் முன்னேற்றத்திற்காக, நாட்டிற்கு பெருமையையும் புகழையும் தேடித்தரும், ஆரோக்கியமான ஒழுக்கமான குடிமக்களை உருவாக்கும் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கொள்கையை அமுல்படுத்துவது எமது அரசாங்கத்தின் ஒரு நோக்கமாகும்.

பொலிஸ் சேவையைப் பற்றி ஒரு சில கருத்துக்களை முன்வைக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில், பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிறுவனமாக பொலிஸ் துறை மிக முக்கியமான பணியை ஆற்றி வருகிறது.

சட்டத்தின் ஆதிக்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் மிக முக்கியமான அம்சம் பொலிஸ் துறையின் சுயாதீனமான செயல்திறன் மிக்க செயற்பாடே ஆகும்.

ஆயினும், இலங்கை பொலிஸ் துறை பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால், அரசியல் அல்லது வேறுவிதமான சமூகத் தொடர்புகளோ பண உதவியோ இன்றி சேவையைப் பெற முடியாத ஒரு நிறுவனம் என்பதேயாகும். அந்த கருத்தை மாற்றுவதற்கு உங்கள் ஒழுக்கம், சட்டத்திற்குக் கட்டுப்படுதல் மற்றும் நியாயமான முறையில் கடமைகளைச் செய்வது மிகவும் அவசியமாகின்றது.

அதேபோன்று, சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல் தலையீடுகளுக்கு ஆளாக நேர்ந்ததால் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாது பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போதைய அரசாங்கம் எந்த விதத்திலும் உங்கள் சேவையில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தவோ, தலையிடவோ செய்யாது. ஆகையினால், உங்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சட்டத்தை சுதந்திரமாக அமுல்படுத்துவதற்கு எந்தத் தடையும் ஏற்படப் போவதில்லை. அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கு உங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியிலான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்பு ரீதியிலான, பொதுமக்களுக்கு நெருக்கமான ஒரு சேவையாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி, உங்கள் தொழிலை சமூகத்தால் அங்கீகரிக்கப்படும், மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு தொழிலாக மாற்றி அமைப்பதற்கு விளையாட்டின் மூலம் பெறப்படும் ஒழுக்கம், பொறுமை, ஒற்றுமை மற்றும் மன ஒருமைப்பாடு ஆகியவை மிக முக்கியமானவை என்பதை நினைவுபடுத்திய பிரதமர் அவர்கள், மக்களின் நம்பிக்கையை வென்ற ஒழுக்கமான, சுயாதீனமான பொலிஸ் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்."

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமாரகமகே, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ரங்க திசாநாயக்க, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வீர வீராங்கனைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்வாங்கும் வகையில், ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கு ஜனாதிபதி நிதியம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கான, மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு செப்டம்பர் 14ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பானது நாட்டின் எதிர்கால மாற்றத்திற்குத் தேவையான பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் பெற்றுத்தரக் காரணமாக அமையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

"ஜனாதிபதி நிதியம் பற்றிப் பேசும்போது அதைத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றியே அதிகம் கேள்விப்படுகிறோம். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அதேபோல், மனித வளத்தை மேம்படுத்துவதை அரசாங்கம் தனது முதன்மைப் பணியாக அடையாளம் கண்டுள்ளது. அந்த நோக்கத்துடனேயே நாம் கல்வியில் முதலீடு செய்கிறோம். அந்த முதலீடானது பண ரீதியில் மட்டுமன்றி ஏனைய அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம்."

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள்,

"ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் நிதியம், அதேபோன்று அது மக்களின் தனி உரிமையாகும். அதனை முறையாக மக்களிடம் ஒப்படைப்பதே நமது பொறுப்பு.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஜனநாயக ரீதியிலான மாற்றத்தின் கீழ், மனித வளத்தை அபிவிருத்தி செய்தல் மிகவும் அவசியமானதாகும். இலங்கை அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினரைக் கொண்ட ஒரு நாடாகும். ஆகையினாலே, அந்த மாற்றத்தை அடைய இந்த அரசாங்கம் உங்களுக்காக அந்த கல்விச் சூழலை உருவாக்கி வருகிறது" என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, "கோப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள், தகுதிகளுக்கு அப்பால், சமூக உணர்வுள்ள, சமூகப் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கக்கூடிய, நாடும் சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்ற மாணவர் சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவலக பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை அதிகாரிகள், நிர்வாகத் துறை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டம்பர் 13ஆம் திகதி கலந்துகொண்டார்.

இந்த வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்ட பிரதமருக்கு, பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க ஆகியோரால் விசேட ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் பிரதான மண்டபத்தில் மாத்தறைப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மதத் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் போது நீண்ட வரலாறு கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் கலந்துகொள்ள கிடைத்தமை ஒரு பாக்கியம் எனத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் சார்பில் திருவிழாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"இந்த தேவாலயத்திற்கும், நகரிலுள்ள ஏனைய மதஸ்தலங்களுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவம் மற்றும் பிணைப்பின் மூலம் ஒற்றுமை, நீதி மற்றும் சமத்துவம் என்ற விழுமியங்களுக்காக வழங்கப்படும் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மாத்தறை நகருக்கு மட்டுமல்லாது இந்த நாட்டுக்கே இது அவசியமானதாகும். இந்த முன்மாதிரி நமக்குத் மிகவும் தேவையானது. இந்த முன்மாதிரியை எமக்கு பெற்றுத்தரும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அத்துடன், சமூகத்திற்காக நீங்கள் செய்யும் இந்த சேவைக்கும், சமூக நீதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் இந்த பங்களிப்புக்கும் மேலும் வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா, காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க, காலி மறைமாவட்டத்தின் துணைத் தலைவர் அதிவணக்கத்துக்குரிய மைக்கேல் இராஜேந்திரம், தேவாலயத்தின் நிர்வாகி அருட்தந்தை ஜூட் சம்பத் விலேகொட உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மாத்தறை கோட்டை இரத்னபால பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும், மகா மந்தின்த பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும் ஆகிய சாஸ்திரவேதி பண்டிதர் அதிவணக்கத்துக்குரிய திஸ்ஸமஹாராம இந்திரானந்த தலைமைத் தேரர், மாத்தறை கோட்டேகொடை ஜயசுமனாராம விகாரையின் விஹாராதிபதி அதிவணக்கத்துக்குரிய யட்டிகல சோமதிலக தலைமைத் தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல, மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செப்டம்பர் 11ஆம் திகதி கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார்.

தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிக்கிறேன். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

"எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளர் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இதை வெறுமனே அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருத முடியாது. தெற்காசியாவில் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் இதுவாகும். இவ்வாறான சூழ்நிலையிலும் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நான் வன்முறையாகவும் துன்புறுத்தலாகவுமே பார்க்கிறேன். இந்த கலாசாரத்தை ஒழிப்பதற்கே நாம் முயற்சி செய்கிறோம். இன்று காலையிலும் இந்த குழுவினர் இதேபோன்றுதான் இங்கு நடந்து கொண்டார்கள்.

எனவே, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம், இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் விடயங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே இச்சம்பவம் தொடர்பான மக்களின் வெளிப்பாடாக இருக்கின்றது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். இந்த சம்பவம் எவ்வளவு அருவருப்பானது என்பதை நீங்களே பாருங்கள். இந்த நாட்டு மக்கள் இதற்கு மேலும் இந்த முறையை விரும்பவில்லை.

நாம் கடுமையாக உழைத்தே 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருக்கிறோம். இன்று அந்தப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை இவ்வாறான வாய்மொழி அச்சுறுத்தல்களாகவே ஆரம்பமாகின்றன. புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் திறமைகள் இந்தப் பாராளுமன்றத்திற்கு ஒரு சவாலாக அமைந்திருக்கின்றது. இதுவே ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்திருக்கிறது, இதுதான் இங்குள்ள பிரச்சனை. இந்த நாட்டின் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பேசும்போது அவர்களை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். மக்களின் கருத்தைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நீங்களும் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கும் நாட்டின் இளம் சிறுமிகளும் ’ஒரு நாள் நானும் அவர்களைப் போல் வரவேண்டும்’ என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவுகளையே நீங்கள் சிதைக்கிறீர்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான தரக்குறைவான நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குங்கள். இந்த பாராளுமன்றத்தில் இப்போது இருக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கையை விட மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பாராளுமன்றத்திற்குள்ளும் அந்த மாற்றம் தேவைப்பட்டதனாலேயே, மக்கள் எதிர்க்கட்சியை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளனர்" எனக் கூறிய பிரதமர், விவாதம் செய்யும் அதே நேரம் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் ஊடகப்பிரிவு