பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்புகள் முன்னெடுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் முறையாக நடைபெறாமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகைமைகளின் அடிப்படையில் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரச அச்சகம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

இலங்கை அச்சக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய, தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்த திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தற்போது அரசு அச்சகத் திணைக்களத்தில் இல்லாமையினால், திணைக்களத்தின் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள தகுதியும் அனுபவமும் மிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இரகசிய மற்றும் பாதுகாப்பு அச்சுப் பணிகள் உள்ளிட்ட இணையவழியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு பணிகளும் குறைக்கப்படவில்லை. இப்பணிகளின் தரம், இரகசியத்தன்மை மற்றும் நடைமுறைகளைப் பேணுவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அத்துடன், முழுநேர அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாக நீடித்த ஒன்றாகும். அதற்கான தெளிவான காரணங்களை நாம் அறிவோம். அரச சேவையில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாமையே பிரதான காரணமாகும். இது அரசு அச்சகத்திற்கு மாத்திரமின்றி, பல அரச நிறுவனங்களிலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம், எனப் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இம்முறை பெரும் போக நெல் கொள்வனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

2025/2026 பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினை ’நாடு’ அரிசி 120 ரூபாவிற்கும், ’சம்பா’ 130 ரூபாவிற்கும், ’கீரி சம்பா’ 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்வனவிற்கென உறுதிப்படுத்தப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு, தரமான நெல் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும். இதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கொள்ளளவை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மெட்ரிக் தொன் வரை அதிகரித்து, நெல் கொள்வனவிற்கான தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியாவில் நடைபெற்ற ’2026 செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு’குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்,

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ’தெற்கு பூகோள’ பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். மக்கள், உலக சமூகம் மற்றும் தரம் ஆகிய துறைகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்துக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

மனித மூலதனம், சமூக வலுவூட்டலுக்கான உள்ளடக்கம், பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அறிவியல், மீளெழும் திறன், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன், செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகிய துறைகள் குறித்து அங்கு ஆராயப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்ததுடன், பொறுப்புமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அரச தலைவர் மட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு அமைந்திருந்ததால், இலங்கையின் நிலைப்பாட்டையும் இத்துறை மீதான ஆர்வத்தையும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்விச் சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (HRDEP) குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியின் தரம் மற்றும் பொருத்தப்பாட்டை மேம்படுத்துதல், ஆசிரிய குழாமின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கல்வித் துறை நிர்வாகத் திட்டத்தைச் செம்மைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டில், தொழில்நுட்பத் திறன் மற்றும் தேர்ச்சிமிக்க மனித வளங்களின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். ஒட்டுமொத்தக் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தியிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் தேசிய அபிவிருத்தியின் அனைத்துத் துறைகளையும் முன்னோக்கி இட்டுச் செல்லக்கூடிய பலமான மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதே இதன் இறுதி இலக்காகும் எனச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். இத்துறைசார் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், சர்வதேச நிதி வசதிகள் ஊடாக ஒத்துழைப்புகளை நீடிக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமானவை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு ஆகிய முப்பகுதிகளின் சங்கநாயக்கர் பதவியைப் பெற்ற வணக்கத்துக்குரிய கங்கோடகம விமலரத்ன நாயக்க தேரருக்கு, அதற்கான ’சன்னஸ்பத்ர’ பதவிப் பிரமாணப் பாத்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இன்று (01) புத்தல கலாசார மத்திய நிலையத்தில் இதனைத் தெரிவித்தார்.

ஊவா அமரபுர மகா நிகாயவின் புதிய நாயக்க தேரருக்கு, அதற்கான ’சன்னஸ்பத்ர’ ஆவணத்தைப் பிரதமர் கையளித்த அதேநேரம், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர ’விஜினிப்பத்த’ (விசிறி) கௌரவச் சின்னத்தை வழங்கிவைத்தார்.

புதிய சங்கநாயக்கர் பதவி பெற்ற நாயக்க தேரருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமர்,

ஊவா மாகாணம் என்பது எமது நாட்டிற்கு மதரீதியிலான பாரிய பணிகளை ஆற்றிய பௌத்த துறவியல் பரம்பரையொன்று உருவான மாகாணமாகும். எமது நாயக்க தேரரும் அந்தப் பாதையில் பயணித்து, தனது 60 வருடங்களுக்கும் மேலான துறவற வாழ்க்கையில் தர்மத்தின் ஊடாக மாத்திரமன்றி, மருத்துவ சாஸ்திர அறிவின் மூலமும் இப்பிரதேச மக்களுக்கும் மாகாணத்திற்கும் பாரிய சேவையாற்றியுள்ளார்.

உதவி ஆசிரியர், பிரிவெனாதிபதி மற்றும் அதிபர் என இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றி, தனது அறிவின் மூலம் எமது நாட்டுப் பிள்ளைகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்பதை நாம் அறிவோம்.

குறிப்பாக, இப்பிரதேசத்தின் கல்வி கற்றலை ஊக்குவிக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு 6ஆம் தரம் முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தேவையான நிதி உதவிகளை வழங்குவதோடு, ஏனைய வசதிகளைச் செய்துகொடுத்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு எந்நேரமும் கைகொடுத்தமை, பிரதேசப் பிள்ளைகளின் தர்ம அறிவை மேம்படுத்துவதற்காகத் தர்ம பாடசாலைகளை ஆரம்பித்தமை என நாயக்க தேரரின் வழிகாட்டலிலும் அர்ப்பணிப்பிலும் முன்னெடுக்கப்பட்ட சமூகப் பணிகளை இவ்வேளையில் நினைவுகூர வேண்டும்.

புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இந்நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லப் பாரிய பணிகளைச் செய்து வருகின்றோம். அந்தப் புதிய யுகத்தில், உங்களைப் போன்று மக்களுக்காகப் பரந்த சமூகப் பணியை ஆற்றி வரும் மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கம் ஊவா மாகாணத்திற்கு, குறிப்பாகப் பதுளை மாவட்டத்திற்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது நாம் அந்தத் துயரங்களிலிருந்து படிப்படியாக மீண்டு, வலுவாக எழுந்து நிற்கும் ஒரு காலப்பகுதியில் இருக்கின்றோம். அந்த அனர்த்தத்தினால் தமக்கு நெருக்கமானவர்களின் உயிர்களை இழக்க நேர்ந்ததின் வலிகளையும் தாங்கிக்கொண்டு, மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கு, புதிதாக சங்கநாயக்கர் பதவியைப் பெற்றுக்கொண்ட உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன்,என தெரிவித்தார்

இந்நிகழ்வில் அமரபுர மகா நிகாயவின் ஊவா பிரிவின் அநுநாயக்கரும், பதுளை மைலகஸ்தென்ன போதிருக்காராமாதிபதி வணக்கத்துக்குரிய வதுபிட்டியே ஞானானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தல பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள்

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கமைய, பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரமலான் நோன்பு நோற்கும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களுடன் மார்ச் 01ஆம் திகதி நடைபெற்ற சுமுகமான சந்திப்பின் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுடகனாவ ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டித அதிவணக்கத்துக்குரிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரைச் சந்தித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

தொழிற்கல்விக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்கும் வகையில், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி நவீன பாடநெறிகளுடன் கூடிய 50 தொழிற்கல்வி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளைக் கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தல பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையை வகுக்கக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாணவர் சுதந்திரத்தை ஒருபோதும் மட்டுப்படுத்த மாட்டோம், வன்முறைகளையும் பகிடிவதையினையும் ஒழிக்க மாணவர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையொன்றின் அவசியத்தை மாணவர் சங்கங்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான கொள்கை வரைபைத் தயாரிப்பதற்குக் குழுவொன்றை நியமிக்குமாறும், அதில் மாணவர் சங்கங்களின் கருத்துக்களை முன்வைக்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் பெப்ரவரி 27ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினர் விரிவாக விளக்கமளித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தை எவ்வகையிலும் மட்டுப்படுத்தப் போவதில்லை எனவும், இது குறித்து எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளகப் பயிற்சியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தங்குமிடப் பிரச்சினைகளே பிரதான காரணம் எனவும், இதற்குத் தீர்வுகாணச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்ளகப் பயிற்சியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மேலதிகமாக ஐந்து வைத்தியசாலைகளுக்கு அங்கீகாரம் கோரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

வயம்ப, குருநாகல், குளியாப்பிட்டிய, சபரகமுவ மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காணிகளைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த மறுகணமே கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் வலியுறுத்தினர். அத்தோடு, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பீடங்களில் பயிற்சியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மருத்துவப் பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், பயிற்சிக்குப் பின்னரான நியமனங்களை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் அழைப்பாளர் நவோத்ய மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்கத் தேரர் கௌரவிப்பு விழா

மகா விகார வம்ச ஸ்ரீ சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரப் பிரிவின் சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்கர், ஓய்வுபெற்ற பிரிவெனா பரிசோதகர், ராஜகீய பண்டித, முதுகலைமாணி, நூலாசிரியர், கலாபூஷண, வினய கீர்த்தி ஸ்ரீ தம்மதின்ன சரணபால அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்க தேரர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "கௌரவாபினந்தன" பாராட்டு விழா, 2026 பெப்ரவரி 25ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பிரிவின் அநுநாயக்க, கலாநிதி அக்கமஹா பண்டித நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்ஷித விஜிதசிறி அநுநாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்தாபிதான நாயக்க தேரர் அவர்களுக்குரிய பாராட்டு ஞாபகச் சின்னத்தைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களும் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி அவர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சபரகமுவ மாகாணத்தின் பிரதம சங்கநாயக்க அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்க தேரர் அவர்களின் மத மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நாயக்க தேரரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, அவரது அனுபவங்கள் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றன. சபரகமுவவின் புகழ்பெற்ற துறவியான வணக்கத்துக்குரிய கேல்லே ஸ்ரீ சரணநந்த தேரரின் சீடராகத் துறவறத்தில் இணைந்த நாயக்க தேரர், தற்போது உபசம்பதா பதவி பெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புமிக்க மதப்பணிகளை ஆற்றிவருகின்றார்.

வித்தியோதய பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று, பல தசாப்தங்களாக ஆசிரியராகவும், பிரிவெனா பரிசோதகராகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவொளி ஊட்டிய அவர், பல இலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். குறிப்பாக, பிரிவெனா கல்வி பயிலும் மாணவர்களுக்காக அவர் ஆற்றிய செவ்வியல் இலக்கியப் பங்களிப்புகள் மிகவும் பெறுமதிமிக்கவை.

இரத்தினபுரி மகாவல ஸ்ரீ தர்ம நிறுவனத்தை மையமாகக் கொண்டு, அப்பகுதி மக்களின் ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டிற்காக நாயக்க தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பைப் பிரதமர் இங்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அத்துடன், நாயக்க தேரர் அவர்கள் தொடர்ந்தும் தனது மதப்பணிகளை முன்னெடுக்க உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கப்பெற வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் உத்தராதிகாரி மகாநாயக்க, மெய்யியல் முதுகலைமாணி கரகொடை உயங்கொட மைத்திரிமூர்த்தி மகாநாயக்க தேரர், ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அநுநாயக்க பண்டித வல்பொட குணசிறி அநுநாயக்க தேரர், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மல்வத்து மகா விகாரப் பிரிவின் பிரதிச் செயலாளருமான பண்டித மஹவெல தம்மக்கந்த ரதனபாலாபிதான தேரர், மல்வத்து மகா விகாரையின் மஹோபாத்தியாய மற்றும் இரத்தினபுரி, ஊவா வெல்லஸ்ஸ ஆகிய இரு திசைகளின் பிரதம சங்க நாயகரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருமாகிய பெத்கமுவே தம்மதின்னாபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மேலும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ. விஜேதுங்க, ஜானக வக்கும்புர, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் சிந்தன உதார நாநாயக்கார, மகா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே இஷான் மாபிடிகம, இரத்தினபுரி நகர முதல்வர் இந்திரஜித் கட்டுகம்பொல உள்ளிட்ட பெருமளவிலான அதிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு