பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்குப் புதிய அலுவலர் குழு நியமனம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை 29 அன்று பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள், யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக்க கலுவெவ அவர்கள் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜனத் தொடர்பாடல், சமூகவியல் மற்றும் சுற்றாடல் ஆகிய முக்கிய துறைகளில் யுனெஸ்கோ அமைப்பின் இலக்குகளுக்கு அமைய, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களில், துறைசார் நிபுணர்களான கலாநிதி ஆஷா டி வோஸ், திருமதி சந்திரா விக்ரமசிங்க, கலாநிதி டீ. பி. மெதவத்தகெதர, திரு. சுவாமிநாதன் விமல் ஆகியோருடன், யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க மற்றும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி நதீகா ரத்நாயக்க ஆகியோரும் அடங்குவர். மேலும், நியமிக்கப்பட்ட மற்றைய உறுப்பினர்களாக திரு. ஹேமந்த புபுதுசிறி, திருமதி சசிகலா பிரேமவர்தன, திருமதி சமந்தி சேனநாயக, செல்வி அப்சரா கல்தேரா, திரு. மொஹமட் நவாஸ், திரு. ஆர்.ஏ.டி.எஸ். ரணதுங்க, திரு. டபிள்யூ.ஜி. குமாரகம, திரு. சுஜீவ பல்லியகுருகே, திருமதி தீபா லியனகே, திரு. எச்.ஏ.எச். பெரேரா, திரு. எஸ்.எஸ்.பி. டி அல்விஸ், திரு. வருண ஸ்ரீ தனபால, திரு. டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பளம்கும்புர, திரு. எம்.எஸ்.எல்.ஆர்.பி. மாரசிங்க, கலாநிதி நிலான் குரே மற்றும் செல்வி சனுஜா கஸ்தூரியாரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இந்நாட்டுக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், இன்று (28) பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மூன்று அமைதியான முறையில் நடந்த தேர்தல்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும், அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நெதர்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் எனவும் தூதுவர் இங்கு வலியுறுத்தினார்.

நெதர்லாந்து தூதுவராக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்திலும் நெதர்லாந்தின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக செயற்படுமாறும், எதிர்காலப் பணிகளுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் திரு. நாமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் உதவிப் பணிப்பாளர் செல்வி. திவங்கா அத்துரலிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எமது சமையற்கலைஞர்கள் வெறும் சமையல் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மரபுரிமையின் தூதர்களும் ஆவர். அவர்கள் பரிமாறும் ஒவ்வொரு உணவிலும், மணமூட்டும் பொருள், இடம் மற்றும் விருந்தோம்பலின் கதையை எடுத்துச் செல்கிறார்கள். – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற SIRHA BOCUSE D’OR இலங்கை 2025 விருது வழங்கும் விழாவில் உரையாற்றும்போது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இது வெறும் உணவைப் பற்றியது அல்ல. இது சிறப்பைப் பற்றியது, மரபுரிமை பற்றியது, அடையாளம் பற்றியது. இலங்கைக்கு, இந்த உலகளாவிய பயணத்தில் எமது பங்கேற்பு, சமையல் கௌரவத்தை விடவும் அதிகமானது.

இது சர்வதேச உரையாடலின் மையத்தில் நம்மை நிலைநிறுத்துவதாகும். அது படைப்பாற்றல், கைவினை மற்றும் கலாச்சார வெளிப்பாடு பற்றிய உரையாடலாகும். 2011 முதல், நாங்கள் முதன்முதலில் எங்கள் சமையல் தூதர்களை உலக அரங்கிற்கு அனுப்பியதிலிருந்து, எமது பயணம் அர்ப்பணிப்பு, தொலைநோக்கு மற்றும் எமது உள்ளார்ந்த ஆற்றல் பற்றிய வலுவான நம்பிக்கையால் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மேடையில் இலங்கையின் பிரசன்னம் தற்செயலானது அல்ல. இது எமது விருந்தோம்பல் துறையின் முன்னேற்றம், எமது சமையல் கல்வி மற்றும் எமது தேசிய குறிக்கோளைப் பிரதிபலிக்கிறது.

இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முக்கியமான பொருளாதாரத் துறைகள் மட்டுமல்ல. அவை நாம் யார் என்பதன் பலம் வாய்ந்த வெளிப்பாடுகளும் ஆகும். ஒவ்வொரு மறக்க முடியாத உணவு அனுபவமும், அது ஒரு சொகுசு ஹோட்டலில் பரிமாறப்பட்டாலும் அல்லது எளிய உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்டாலும், எமது அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை, உலகளாவிய நற்பெயரை உருவாக்குவதோடு மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குகிறது.

இலங்கைக்கு, Bocuse D’Or ஒரு பிரதிபலிப்பும் வழிகாட்டியும் ஆகும். நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது, அதே போன்று எமது முன்னோக்கிய பாதையை வடிவமைக்க உதவுகிறது. எமது பங்கேற்பு தரங்களை உயர்த்தியுள்ளது, உலகளாவிய குறிக்கோளை ஊக்குவித்துள்ளது மற்றும் புதிய தலைமுறை இலங்கை விருந்தோம்பல் நிபுணர்களிடையே சிறப்புத் தன்மை பற்றிய உணர்வை ஊக்குவித்துள்ளது.

பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு துறையில் இவ்வளவு பெண் சமையற்கலைஞர்கள் பங்கேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையின் சமையல் துறையில் வலுவான பெண் தலைமைத்துவம் வளர்ந்து வருவதைக் காண்பது ஊக்கமளிக்கிறது."

விழாவின் போது, சின்னமன் லைஃப் ஹோட்டலுக்கு தங்கப் பதக்கமும், ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு வெள்ளிப் பதக்கமும், ஷெரட்டன் ஹோட்டல் கொழும்புக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமையல் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

“கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பணம்" (LAUNCH OF THE KINGDOM OF KOTTE TOURISM INITIATIVE) மற்றும் ’கோட்டே பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 27 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில், “இது இலங்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு முக்கியமான முயற்சி. இந்த திட்டம் ஒரு சுற்றுலாப் பாதை என்பதைப் பார்க்கிலும் இது வரலாறு, இயற்கை மற்றும் பாரம்பரியம் வழியான ஒரு பயணமாகும். இலங்கையின் நிர்வாக மையமாக மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தொன்மை, கலாசார செழுமை மற்றும் சூழல் மதிப்பு கொண்ட இடமாகவும், நமது தலைநகரை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

இது மக்களுக்கு ஒரு நல்ல கலாசார வாழ்க்கையையும் அதே போல் இந்த நகரம் வழங்கும் ஏனைய அனைத்து விடயங்களையும் அனுபவிக்கக்கூடிய ஒரு சிறந்த நகரத்தை உருவாக்குவதற்கு சந்தர்ப்பத்தை அளிக்கும். மேலும் ஒரு நகர்ப்புற ஈரநிலம் என்ற வகையிலும் இது ஒரு தனித்துவமான ஈரநிலம். உலகில் ஒரு சில தலைநகரப் பகுதிகள் மட்டுமே இத்தகைய சூழல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளன என்று நான் நம்புகிறேன். அதன் காரணமாகவும் நாம் இதை ஊக்குவிக்க முடியும்.

14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கோட்டே நகரம், சீனர்கள், போர்த்துகீசர்கள், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்த ஒரு வரலாற்று நகரமாகும் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையை ஒரு இறைமை கொண்ட நாடாக ஒன்றிணைத்து ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னரின் வசிப்பிடமாக இந்த கோட்டே நகரம் இருந்தது.

இந்த நகரம் சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலம் என்பதையும் நாம் அறிவோம். இன்றும் கூட, இந்த வளமான வரலாற்றின் அம்சங்கள் எஞ்சியுள்ளன. "பண்டைய சுவர்கள், கால்வாய்கள், மதத் தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன ஒரு கீர்த்திமிக்க மற்றும் வலுவான இராச்சியத்தின் கதையை அமைதியாகச் சொல்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று பிரதமர் கோட்டே நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து கருத்துக்களை வெளியிட்ட பிரதமர், ஆனால் கோட்டே வெறும் கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். உலகின் முதல் ஈரநில தலைநகரான கோட்டே, சிறந்த திட்டமிடல் மற்றும் சூழலுக்கான ஆழ்ந்த கௌரவத்துடன் வழிநடத்தப்பட்டால், நகர்ப்புற வாழ்க்கையும் உயிர் பல்வகைமையும் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக திகழும்.

வரலாறு, கலாசாரம் மற்றும் இயற்கையின் இந்த தனித்துவமான பரிமாணங்களை ஒரே அனுபவமாக இணைக்க கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இலங்கையர்களுக்கும் சர்வதேச விருந்தினர்களுக்கும் நீண்ட காலமாக மறைந்து கிடக்கும் கோட்டே இராச்சியத்தை ஆராய்வதற்கான ஒரு இடமாக சுற்றுலாத் துறையின் கவனத்தை அதன் மீது செலுத்துமாறு நான் உங்களை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனென்றால் கோட்டேவைப் பற்றி பலருக்குத் தெரியாத அல்லது புரிந்துகொள்ளாத நிறைய விடயங்கள் உள்ளன. ஈரநிலங்கள் முதல் வரலாற்று அம்சங்கள் வரை, கோட்டேவில் நிறைய விடயங்கள் மறைந்துள்ளன. கோட்டே பசுமை சுற்றுலா வலையமைப்பின் நெறிப்படுத்தலில், மேல் மாகாண சுற்றுலா சபை மற்றும் ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுபின் ஆதரவுடன், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, சமூக அடிப்படையிலான மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான ஒரு சிறந்த அர்ப்பணிப்பு, அத்துடன் பிரதேச தலைமை, குடிமக்கள் மற்றும் தேசிய பாரம்பரியம் ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைவதற்கான ஒரு வாய்ப்பாகும். அனைத்து இலங்கையர்களின் சார்பாக, இந்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்காளர்களை நான் பாராட்டுகிறேன்.

உங்களது இந்தப் பணி, நமது தலைநகரை ஒரு நிர்வாக நகரமாக மட்டுமல்லாமல், ஒரு வாழும் அருங்காட்சியகமாகவும், திறந்த வகுப்பறையாகவும் திரும்பிப் பார்க்கவும் சிந்திக்கவும் உதவுகிறது. இதன் ஒவ்வொரு தெரு மூலையிலும், ஈரநிலத்திலும், சமய ஸ்தாபனங்களிலும் ஒரு கதை மறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தப் புதிய பயணத்தில் நாம் ஈடுபடும்போது, கோட்டே சுற்றுலா உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு மட்டுமன்றி, இந்த நகரத்தை தாயகமாகக் கொண்ட சமூகங்களுக்கும் கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்கிறோம். நம் அனைவருக்கும் சொந்தமான பாரம்பரியத்தை கொண்டாடுவோம், பாதுகாப்போம், எதிர்கால சந்ததியினரிடம் மிகவும் பாதுகாப்பாக ஒப்படைப்போம் என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆகியோர், தேசிய மக்கள் சக்தி ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்பே பேசியும், செயற்பட்டும், திட்டமிட்டும் வந்த இந்த திட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் மற்றொரு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோட்டே நகரபிதா அரோஷ அத்தபத்து, உலகெங்கிலும் உள்ள பல தலைநகரங்களில் உள்ளது போல, நாடு மற்றும் அதன் தலைநகரம் பற்றிய தகவல்களை வழங்கும் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் போன்ற வசதிகளை கோட்டே நகரில் நிறுவ அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அந்த நோக்கத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் கோட்டே மாநகர சபை எப்போதும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கோட்டே பசுமை சுற்றுலா வலையமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, கோட்டே நகரபிதா அரோஷ அதபத்து, நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்விச் சீர்திருத்தம் என்பது, புதிய பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதல்ல மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றி அமைப்பதாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இரத்தினபுரி, ஜூலை

அந்த மாற்றத்தை பற்றி சரியான சமூக கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும்

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’நாட்டிற்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ என்னும் தலைப்பில் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மகளிர் ஒன்றியம் இரத்தினபுரி நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

கல்விச் சீர்திருத்தம் குறித்து மேலும் உரையாற்றிய பிரதமர், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாக அமையாத கல்வி முறைமையை உருவாக்குவது தமது அரசியல் இயக்கத்தினுள் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட ஒரு விடயம் என்றார். இது தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தமானது புதியதோர் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைக்கும் ஒரு செயல்திட்டமாகும். நாம் இந்த முறைமைக்குள் கண்டிருக்கும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. பரீட்சைகளை மையமாகக் கொண்ட இக்கல்வி முறைமையினால் சிறார்கள் மீது ஏற்படும் அழுத்தம், அதனால் பெற்றோருக்கு ஏற்படும் அழுத்தம், அதனால் ஏற்பட்டிருக்கும் போட்டியினால் உருவாகி இருக்கும் தீமையான சமூக விளைவுகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடை காண நாம் இக்கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் முயற்சிக்கின்றோம்" எனப் பிரதமர் விளக்கமளித்தார்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசியபோதிலும், கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டபோதிலும், அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும் அவர்கள் கல்வியையும் தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

"இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் ’தேசியப் பாடசாலை’ எனப் பெயர் பலகையை மாத்திரம் மாற்றிய எத்தனை பாடசாலைகள் இருக்கின்றன? கல்வியின் தரத்திற்கு எத்தகைய நிலைமை ஏற்பட்டபோதிலும், தமது பெயரால் கட்டிடத்தைத் திறந்து வைப்பது போன்ற கண்காட்சி அரசியலுக்காகத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திய இந்த அரசியல்வாதிகள், தமது அரசியலுக்காகக் கல்வியைப் பயன்படுத்தி அத்துறைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்," என்று பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோன்று, கடந்தகால அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்து, கல்வியின் சுமையை பெற்றோர் மீது சுமத்தின. கல்வித்துறைக்கு மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கும் ஆசிரியர் உள்ளிட்ட கல்வித்துறை நிர்வாக சேவையில் கடமையாற்ற வேண்டியவர்களின் தொழில்சார் வளர்ச்சியை ஏற்படுத்தி மனிதவளத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அந்த மனிதவளத்திற்குப் பாதகங்களை விளைவிக்கும் துறைகளை வளர்ச்சி அடையச் செய்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்விச் சீர்திருத்தம் பற்றி கடந்த அரசாங்கங்கள் கலந்துரையாடியிருந்தபோதிலும், அவ்வாறு கலந்துரையாடுகின்ற அதேவேளையில் கல்வி முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனிதவளங்கள், அடிப்படை வசதிகள், முதலீடுகள் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவருகிறது. அவ்வாறு மறுசீரமைப்புக்குத் தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாவிட்டால், இத்தகைய கல்விச் சீர்திருத்தங்களில் தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

"ஆயினும், நாம் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு சமூகத்தினுள் இதைப் பற்றிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி, தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, சமூகத்தில் ஏற்பட வேண்டிய கருத்து மாற்றம் உள்ளிட்ட அனைத்து விடயங்களைப் பற்றியும் கவனம் செலுத்தி, இக்கலந்துரையாடல்களில் அவற்றை உள்வாங்கி உண்மையான ஒரு சமூக மாற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால், இது பற்றிய பரந்த சமூகக் கலந்துரையாடலை ஏற்படுத்தும் பொறுப்பு உங்களையே சாரும்," எனப் பிரதமர் அங்கு குழுமியிருந்தவர்களை வலியுறுத்தினார்.

அந்த வகையில், கல்வி ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடாக எமது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்கும், அதனுள் ஒழுக்கமான ஒரு சமூகத்தை ஏற்படுத்துவதற்கும், உலக நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்தக் சமூகக் கலந்துரையாடல்களின் செய்தியை சமூகமயப்படுத்தும் செய்தியாளர்களாகச் செயல்பட முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலுஷா லக் மாலி, இரத்தினபுரி நகர மேயர் திரு இந்திரஜித் கட்டுகம்பொல மற்றும் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் மக்கள் பிரதிநிதிகளினதும், இரத்தினபுரி மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பெருமளவு செயற்பாட்டாளர்களினதும் பங்கேற்பில் இடம்பெற்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

பூட்டான், கசகஸ்தான், ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எரித்திரியா தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் கௌரவ சேர்ஜி விக்டோரோவ், (புதுடில்லியைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் கௌரவ யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் கௌரவ அலம் வோல்டெமரியம், மற்றும் (இஸ்லாமாபாத்தைச் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் கௌரவ அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

இந்த சந்திப்பானது பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் அனைத்து தூதுவர்களையும் வரவேற்ற பிரதமர், பரஸ்பர நலன்கள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

ஆடை உற்பத்தி, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை விரிவாக்கம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் திருமதி ருவினி முனதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு