நாட்டைத் தாக்கிய சூறாவளியினால் பதுளை மாவட்டப் பாடசாலைக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் ஆராய்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 24) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் (தேசிய பாடசாலை) சென்ற பிரதமர், அங்கு நிலவும் அனர்த்தகரமான நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.
கடும் மழைவீழ்ச்சியினால் மா ஓயா பெருக்கெடுத்ததன் விளைவாக, பாடசாலை வளாகம் பெரும் மண்ணரிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறித்துப் பிரதமர் தனது விசேட கவனத்தைச் செலுத்தினார். இந்நிலைமையினால் பாடசாலைக் கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தல், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள இடர் மற்றும் பௌதீக வளங்கள் சேதமடையும் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அதிபருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
மண்ணரிப்பைத் தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு