ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான செயற்பாட்டை இதனுள் கொண்டுவருவதும், கூட்டுறவை வளர்க்கும் சூழலை உருவாக்குவதும், அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்கள் புத்தாக்கத் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது கடமையாகும்.
மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026, பற்றிய உரையாடலின் இரண்டாம் நாளில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SME) பலப்படுத்தும் நோக்கில் “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026” இன் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, 13ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கட்டமைப்பானது, “வளமான நாடு — அழகான வாழ்க்கை” எனும் தேசியக் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ஆலோசனைக் குழு மற்றும் முக்கிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு, தொழில்முயற்சியாளர்களுக்குத் தமது வர்த்தகத்தினை இலகுவாகப் பதிவு செய்யவும், நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளவும், விசேட நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், பாரம்பரிய முறையிலிருந்து விலகி இலவசமாக வழங்கப்படும் நேரடி ஆலோசனைச் சேவைகளைப் பெறவும் வழிவகுக்கிறது.
இரண்டாம் நாள் நிகழ்வில், “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பின் (2026)” அமலாக்கம் மற்றும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தியதோடு, தொடர் குழு விவாதங்களும் இடம்பெற்றன. தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 அறிக்கையைப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பிரதமருக்கு வழங்கிவைத்தார்.
அங்கு உரையாற்றிய பிரதமர்,
உலகளாவிய நிலையற்ற சூழல் மற்றும் சீர்குலைவு நிறைந்த காலகட்டத்தில் நாடு தனது மாற்றுச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டதோடு, குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையில் தகவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மீட்சி அடைதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிக் கொள்கைக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இத்துறையில் தொடர்ச்சியான செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் கூட்டுறவை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இந்தக் கட்டமைப்பு முக்கியமானது ஏனெனில் இது இத்துறைக்குத் தொடர்ச்சியான கொள்கை மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. இந்தக் கட்டமைப்பானது கொள்கை பற்றியதாகும். துறையில் நிலைத்தன்மையை நிலைநாட்டுவது, கூட்டுறவை வளர்ப்பது மற்றும் கொள்கைகள் ஆகியன குறுகியகால நிகழ்ச்சி நிரல்களாக அல்லாது, சான்றுகளின் அடிப்படையிலும் நீண்டகாலத் தொலைநோக்கு மூலமாகவும் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியனவே இதன் சாரம்சமாகும். கொள்கை நிலைத்தன்மையால் இயக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த முறையில் ஒருமைப்படுத்தப்பட்ட தளமாக, சிதறிக் கிடக்கும் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத ஒரு துறையை ஒன்றிணைப்பதற்கு இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு அரசாங்கம் என்ற வகையில், நிலைத்தன்மையைக் கொண்டுவருவதும், ஒத்துழைப்பை வளர்த்து குழுப்பணிக்கு வழிவகுக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதும், துணிந்து செயற்படவும் புதுமைகளைப் புகுத்தவும் தக்க வகையில் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதுமே அடிப்படையில் எமது பொறுப்பாகும் என நாம் நம்புகிறோம்.
அடிக்கடி கொள்கைகள் மாறாது என்றும், அரசாங்கமே சீர்குலைவின் ஆதாரமாக அமையாது என்றும் மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும். தொடர் செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் அவை பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையின் மூலமே நாம் இந்த முயற்சியை உண்மையான வெற்றியை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாக அமையும். இந்த மிக முக்கியமான முயற்சியை மேற்கொண்ட உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்விச் சீர்திருத்தங்களில் தொழில்முயற்சி மனப்பான்மையை ஒருங்கிணைக்கும் தேவை குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இளைஞர்கள் தமது திறன்களையும் ஆற்றல்களையும் அடையாளம் காணவும், தமது எதிர்காலத்திற்கான பல்வேறு பாதைகளைக் கண்டறியவும் உதவும் கல்வி முறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 6ஆம் தரம் முதல் கைத்தொழில் மற்றும் நிதி பற்றிய அறிவைப் புகட்டும் கல்வியை அறிமுகப்படுத்துவதை முன்னிலைப்படுத்தியதோடு, மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதில் தொழில்துறையின் ஆதரவு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகர் திருமதி Ruth Baird, தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம். திலகா ஜயசுந்தர மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள், வணிகச் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு