பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நாட்டு மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை குறித்துப் பிரதமர் இன்று (03) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்,
கடந்த சில நாட்களாக, நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, இந்தப் பேரிடரால் உயிர் இழந்த, இடம்பெயர்ந்த, சொத்துச் சேதங்களைச் சந்தித்த, பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட எனது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பேரழிவால் இடம்பெயர்ந்த அனைவருக்கும், வீடுகள், வணிகங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, ஒரு அரசாங்கம் என்ற வகையில், சாத்தியமான சகல ஆதரவையும் வழங்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கடந்த சில நாட்களாக, குறிப்பாக, நமது நாட்டின் அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நமது சக குடிமக்களை மீட்டு, நிவாரணம் வழங்கக் கடுமையாக உழைத்துள்ளனர். அரச அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இந்தச் சவாலை எதிர்கொள்வதில், நமது மக்களிடையே ஒற்றுமை, தைரியம், கருணை, இரக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. இது இந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல எமக்கு மேலும் பலத்தை அளிக்கிறது.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அயராது உழைத்த இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் அனைத்து அவசர நிவாரணக் குழுக்களுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களும் உள்ளனர், இது எளிதில் காணக்கூடிய ஒரு விடயம் அல்ல. அவர்கள் அனைவரையும் நான் மரியாதையுடன் இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன். அதேபோல், மீட்புப் பணியின் போது வென்னப்புவ, லுனுவில, ஜின் ஓயாவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகொப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய, வெள்ள அனர்த்தத்தைக் கட்டுப்படுத்த சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றத் தனது உயிரைப் பணயம் வைத்த வீரத்தை ஒருபோதும் மறக்க முடியாது.
மேலும், ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் இந்த கடினமான நேரத்தில் களத்தில் இருந்து நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையும் பாராட்டப்பட வேண்டும்.
விசேட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அரச நில அளவைத் திணைக்களம், தொலைபேசி சேவை நிறுவனங்களின் ஊழியர்கள், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தியாவசிய சேவைகளை வழமைக்குக் கொண்டு வர அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
எமது சுகாதாரத் துறை, மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவச்சிகள் மற்றும் சமூகச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் அயராத அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வக் குழுக்கள், இளைஞர் குழுக்கள், மகளிர் குழுக்கள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்களையும் நாம் குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரும் எந்த இலாப நோக்கமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள். இந்த நோக்கத்திற்காக அவர்கள் பல நாட்களாக அயராது உழைத்து வருகின்றனர். ஒரு நாடாக, இலங்கையாக, நமக்கு இருக்கும் மிகவும் மதிப்புமிக்க பலம், மனிதநேயத்தை அறிந்த, பிறர் மீது இரக்கம் கொண்ட நமது மனித இதயங்களே. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.
இந்தச் சவாலான நேரத்தில் என்னோடு நின்று எமக்குப் பலம் அளித்த நமது நட்பு நாடுகளையும் நான் குறிப்பாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். எமக்குப் பல்வேறு உதவிகளை வழங்கவும், எமது தேவைகளை ஆராயவும் இராஜதந்திர மட்டத்தில் பங்களிப்பை வழங்கிய அனைத்து வெளிநாடுகளுக்கும், அந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டுத் தூதரகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவத் தயாராக இருக்கும் பல சர்வதேச அமைப்புகள் இருக்கின்றமையும் இந்த நேரத்தில் எமக்கு ஒரு பலமாக இருக்கிறது. குறிப்பாக நான் அவர்களை நினைவில் கொள்கிறேன்.
அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அவர்களின் பல்வேறு அமைப்புகள் தமது தாயகம் தற்போது எதிர்கொள்ளும் பேரழிவைக் கண்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களது சொந்தக் காலில் நிற்க உதவவும் முன்வந்துள்ளனர். உலகில் எங்கிருந்தாலும், துயரங்களை எதிர்கொள்வதில் எனது சக இலங்கை மக்களின் தலையீடு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்காக நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
தற்போதைய நிலைமை குறித்த துல்லியமான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகத்துறை சார்ந்தோருக்கும் மற்றும் குடிமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகளை வழிநடத்துவதிலும், சரியான நிர்வாகத்தை உறுதி செய்வதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வழிநடத்துவதிலும் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதனுடன், நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு விசேட அம்சமும் உள்ளது. சிலர் பல்வேறு நன்மைகளுக்காக இந்தத் தருணத்திலும் தவறான தகவல்களைப் பரப்புவதை நாம் காண்கிறோம். இருப்பினும், துல்லியமான தகவல்களைப் பொறுப்புடன் பகிர்ந்துகொள்வதில் உங்களது சேவையானது இவை அனைத்தையும் நிர்வகிப்பதில் எமக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
இந்த அவசர நிலைமையில் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்த கல்வி அமைச்சின் செயலாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரீட்சை ஆணையாளர் நாயகம், பிரதி ஆணையாளர்கள் நாயகம் உள்ளிட்ட பரீட்சைத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் பாதுகாக்கவும், பரீட்சை மையங்களைப் பாதுகாக்கவும், பரீட்சை செயல்முறையின் நேர்மையைப் பராமரிக்கவும் எடுத்துக்கொண்ட அவர்களின் அயராத முயற்சிகள் அவர்களின் தொழில்மீதான அர்ப்பணிப்புக்கு ஒரு உண்மையான சான்றாகும்.
இந்த நேரத்தில், தலவாக்கலை சுமன மகா வித்யாலயத்தில் இயங்கும் பிரதேச சேகரிப்பு மையத்தின் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரி, பணியில் இருந்த உத்தியோகத்தரின், மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழக்க நேர்ந்ததை மிகுந்த வருத்தத்துடன் நினைவு கூறுகிறேன். அது மிகவும் துன்பகரமான ஒரு சம்பவமாகும்.
அதேபோல், நமது பாடசாலைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், பரீட்சைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யவும் இரவும் பகலும் உழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்கள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மாகாண, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துன்பங்களுக்கு மத்தியிலும், உங்கள் அர்ப்பணிப்பானது முன்மாதிரியானது.
நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைத்து, விரைவான தொடர்பாடல் மூலம் தகவல்களை நிர்வகித்து, ஒவ்வொரு சவாலுக்கும் உடனடியாக பதிலளித்த பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
உயர்கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து இணைக்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியின் போது வளங்கள், வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை வழங்க உங்கள் ஆதரவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் தயார்நிலை ஆகியவை உண்மையான தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. மேலும், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் வழங்கி வரும் ஆதரவை பற்றியும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் நாம் மேற்கொண்ட மிக முக்கியமான தீர்மானம், எமது மாணவர்களின் கல்விக் கற்றல் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், அவர்களை உளரீதியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த விடயத்தில் உங்கள் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில், இதனை நேர்த்தியாக முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
அமைச்சுகள், மாவட்டங்கள், மாகாணங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு முயற்சி, நமது கல்வி முறை வெறுமனே ஒரு முறைமை அல்ல, மாறாக அது ஒரு குடும்பம் என்பதை நிரூபிக்கின்றது. கல்வி அமைச்சர் என்ற வகையில், இந்த மகத்தான தேசியப் பணிக்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.
நாம் எப்போதும் கூறுவதைப் போல், நமது பலம் நம் நாட்டின் குடிமக்களே. அவர்களின் கருணைமிக்க இதயங்களே. மற்றவர்கள் மீது இரக்கத்துடனும், மிகுந்த மனிதாபிமானத்துடனும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் குடிமக்களின் இதயங்களைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். பெரும் பேரழிவை எதிர்கொண்டப்போதிலும், கடின உழைப்பு, செயல்திறன், மனிதநேயம் மற்றும் கருணை மிக்க ஒரு நாடாக நமது பலம் என்ன என்பதை நம் நாட்டவர்கள் முழு உலகிற்கும் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.
தமது கஷ்டங்களையும் துன்பங்களையும் பொருட்படுத்தாது, "என்னால் முடிந்ததை நான் தருகிறேன்" என, முன்வந்து இரண்டு பனடோல் பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கிய அந்த "தாயின்" கருணை, நமது தேசத்தின் கருணை, தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது ஒரு கடினமான நேரம். நம் முன்னே ஒரு சவாலான பயணம் உள்ளது, அதைச் சிரமங்களுக்கு மத்தியிலேயே கடக்க வேண்டி இருக்கின்றது. இந்த நேரத்தில் மற்றவர்கள் மீது கருணை, அன்பு மற்றும் புரிதலுடன் செயல்படுவது அவசியமாகும். உயிரிழந்த அனைவர் பற்றியும் நமது இதயங்களில் ஏற்பட்ட வலியும் அதிர்ச்சியும் ஒருபோதும் நமது இதயங்களை விட்டு நீங்காது. இருப்பினும், நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தப் பெரும் துயரத்தைத் தாண்டி நாம் உயர வேண்டும். நாம் ஒற்றுமை, தைரியம், புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய உயிர்ப்புடன் மீண்டும் எழ வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து அதில் இணைந்ததற்காக அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் சகல வித கட்சிச் சார்புகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பாடுபடுவோம் என நமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.
மின்தடை, தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு நீங்கள் காட்டிய பொறுமையும் வலிமையுமே நமது ஒட்டுமொத்தத் தேசத்தின் பலம் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தக் கடினமான நேரத்தில் பல்வேறு வழிகளில் நீங்கள் வழங்கிய பங்களிப்புகள், தைரியம் மற்றும் ஒற்றுமைக்கு எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு