சிக்கலான உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ’டிட்வா’ சூறாவளியின் பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்

சிக்கலான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் மார்ச் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுருக்கமான அறிக்கையை, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான திரு. பிரபாத் சந்திரகீர்த்தி பிரதமரிடம் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் விளைந்த சேதங்களைச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்களினதும் உபகுழுக்களினதும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த 1,15,000 வீடுகளைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சமூகத்தினரின், குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோரின் உடல், உள மற்றும் சமூக நலன்கள் குறித்துச் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் விசேட குழுக்கள் ஊடாகத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தையும், மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்வதன் தேவையையும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹவத்த, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.சி. தர்மதிலக, சிவில் சமூகப் பிரதிநிதிகளான ரோஹண ஹெட்டியாரச்சி, கௌதமன் பாலவன் உட்பட 33 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு