சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின், ’வளமான கிராமம்’ செயற்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட அங்குணகொலபெலஸ்ஸ குளத்தை அண்டிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில், மார்ச் 15ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்குணகொலபெலஸ்ஸ “leisure Island” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாகப் படகுத் தங்குதுறை மற்றும் “leisure Island” உணவகம் என்பனவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
“அங்குணகொலபெலஸ்ஸ குளத்தை அண்டிய இந்தப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக எழுநூறு நாட்களுக்கும் மேலாக மக்கள் தாமாக முன்வந்து தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையினால் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, இப்பிரதேசத்தின் கோட்டச் சபைகள், மக்கள் பாதுகாப்புக் குழுக்கள், இளைஞர் கழகங்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்தில் இந்த இடம் ஒரு பாரிய திட்டமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது.
ஒரு நல்ல நோக்கத்திற்காக அனைவரும் கூட்டாக இணையும்போது நம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்துச் செய்யக்கூடிய காரியமல்ல. நாட்டின் புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பலமான, சரியான தலைமையுடன் ஒன்றிணையும்போது, எந்தவொரு எதிர்சக்தியாலும் தகர்க்க முடியாத வலுவான நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.
அன்றாடப் பணிகளால் ஓய்வற்ற வாழ்க்கையைக் கழிக்கும் கிராமப்புற மக்களுக்கும் சுதந்திரம் அவசியமானது. சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு உன்னதமான கலாசார வாழ்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கம் என்ற வகையில்; மக்கள் பொழுதுபோக்கிற்காகவும், உலாவச் செல்வதற்கும், நிம்மதியாக நேரத்தைக் கழிப்பதற்கும் இவ்வாறான இடங்களை அதிகளவில் நிர்மாணிப்பது மிகவும் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு