நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது
ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (12) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது பெலியத்த ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்குச் சென்ற பிரதமர், 2026ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிற்சிப் புத்தகங்கள், அடிப்படைப் பாடத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வகுப்பறைச் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிப்பதாகத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் ’கல்விப் பேரவை’ ஒன்றினை நிறுவுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு இடையே காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதனையடுத்து வீரகெட்டிய ராஜபக்ஷ ஆரம்பப் பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் தர வகுப்பறைகள் மற்றும் கற்பித்தல் முறைகளைக் கண்காணித்ததுடன், பிள்ளைகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார். பின்னர் வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர், வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உயர்தர மாணவர்களைப் பாடசாலையிலேயே தக்கவைத்துக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தினார்.
அம்பாந்தோட்டை லுணம துடுகெமுனு மகா வித்தியாலயத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் கலந்துகொண்ட பிரதமர், அங்குள்ள உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்துத் தனது கவனத்தைச் செலுத்தினார். பாடசாலை நிர்வாகம் முறையான திட்டமிடலின் கீழ் செயற்பட்டு மாணவர்களின் வரவை அதிகரிக்க வேண்டும் என்றும், வருங்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறான முழுமையான வசதிகளைக் கொண்ட பாடசாலைகளைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் இடையே நைகல ரஜமகா விகாரைக்குச் சென்ற பிரதமர், அதன் விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய வகமுல்லே உதித தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நிஹால் கலப்பத்தி, பிரதி அமைச்சர்களான ருவன் செனரத் மற்றும் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர் அதுல வெலந்தகொட உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு