பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம்.
தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு, பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம் என்றும், தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கண்காணிப்பதற்குமான விஜயத்தின் ஓர் அங்கமாக, ஜனவரி 17ஆம் திகதி மதுரங்குளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தளம் வேலாசிய அரச பாடசாலைக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வேலாசிய பாடசாலைக்கு நீண்டகாலத் தேவையாக இருந்த ஆசிரியர் விடுதிக் கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் இதன்போது நட்டு வைத்தார். அத்துடன், அகில இலங்கை ரீதியில் விருதுகளை வென்ற பாடசாலை மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
பாடசாலையின் வகை, பாடசாலையின் அளவு மற்றும் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் கல்வியின் தரம் தீர்மானிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்குத் தொழில்நுட்பக் கருவிகளைப் பெற்றுக்கொடுத்து, மாணவர்களைத் தொழில்நுட்பக் கல்வி முறைக்குப் பழக்கும்போது, அதனைச் சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகக் கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிகள் மூலம் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது.
பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகக் கருதி, மாணவர்களுக்கு இடையிலான கல்வி மற்றும் சமூக ரீதியான இடைவெளிகளை அகற்றுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம்.
எமது பெற்றோர் கல்வியின் பெறுமதியை அறிந்தவர்கள். அவர்கள் தமது அனைத்து வளங்களையும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிக்கின்றனர். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகக் கல்வித்துறையில் நிலவும் சமத்துவமின்மையை நீக்க நாம் நடவடிக்கை எடுப்போம். தரமான கல்வியை வழங்கி, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காகப் பெற்றோர் எடுக்கும் முயற்சிக்கு இது கைகொடுக்கும் என நான் நினைக்கிறேன்.
முந்தைய கல்வி முறையின்படி, கஷ்டப் பிரதேசப் பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் அந்தந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் தனிப்பட்ட திறமைகளிலேயே தங்கியிருந்தது. ஆயினும், இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அகற்றி, ’கஷ்டப் பிரதேசப் பாடசாலை’ என்று அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
அரசாங்கத்தின் புதிய தேசியக் கொள்கையின்படி, எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்குப் பல்வேறு துறைகளிலும் திறமையான மாணவர்கள் தேவைப்படுகின்றனர். அதற்குத் தகுந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம். தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியைப் பெற்றுக்கொடுக்கப் பெற்றோர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நான் பாராட்டுகிறேன்" எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் மற்றும் புத்தளம் வேலாசிய அரச பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு