’இது எமது காலம்’ நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் தற்போது கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள "இது எமது காலம்" என்ற நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் அருங்காட்சியகம், இதுவரை நாட்டின் 9 மாகாணங்கள், 10 மாவட்டங்கள் மற்றும் 11 நகரங்களை உள்ளடக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,. ஆகஸ்ட் 19 ஆந் திகதி முதல் கொழும்பில் அதன் முதலாவது கண்காட்சியை ஆரம்பித்தது. இது கொழும்பு பொது நூலக வளாகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, 1940கள் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் இந்த நாட்டின் வரலாற்றில் தேசம் மற்றும் தேசிய அடையாளத்தை கட்டியெழுப்புதல், மோதல்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
இதன் மூலம் வரலாறு என்றால் என்ன? அதை யார் எழுத முடியும்? வரலாற்றைக் கற்றுக்கொள்வதற்கான பல்வேறு வழிகள் என்ன? போன்ற விடயங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மற்றும் செயற்பாடுகள் மூலம், இந்தக் கண்காட்சி பிள்ளைகள் சிந்திக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடமாடும் அருங்காட்சியகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட வரலாற்று உரையாடல் மற்றும் நினைவக கூட்டணி (CHDM) , இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்துடன் (SCOPE) இணைந்தும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு (GIZ) இலங்கை நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நிக்கோலஸ் லமாடே மற்றும் CHDM நிறைவேற்றுப் பணிப்பாளர் தனுஜா துரைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு