பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு.

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இருதரப்புக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. பிரதமரை வரவேற்ற தலைவர் Masatsugu Asakawa, அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

’டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடன் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியாவுக்கான) பிரதித் தலைவர் Yingming Yang அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இதன்போது, இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துறைசார் குழு 3 இன் (Sectors Group 3) பணிப்பாளர் நாயகம் Christine Engstrom அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மானுட மற்றும் சமூக அபிவிருத்தி, பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முதலீடுகளின் போது, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மேலதிகமாக, மனிதவள மேம்பாடு மற்றும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ASEAN நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி குறித்த கொள்கை விளக்க உரையாடலில் பிரதமர் கலந்துகொண்டார். பிராந்திய கல்வி முறைகள், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கொள்கைப் பரிமாற்றம் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்துப் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் அபிவிருத்தி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மணிலா விஜயமானது, நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்தல், கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிராந்திய பங்காளிகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண் வலுவூட்டலுக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தலைமைத்துவ விருது

பெண்களின் ’ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு.

பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ’ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) කාන්තා සවිබලගැන්වීම වෙනුවෙන් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියට නායකත්ව සම්මානයක් வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை 

2026 மார்ச் 09 முதல் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார்.

அதற்கமைய, மார்ச் 09ஆம் திகதி பிரதமர், பிலிப்பைன்ஸ் கல்விச் செயலாளர் Sonny Angara அவர்களுடன் கலந்துரையாடினார். கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்தும் பிரதமர் பிலிப்பைன்ஸ் தரப்பிற்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் (CHED) தலைவர் கலாநிதி Shirley C. Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மற்றொரு சந்திப்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரசபையின் (TESDA) செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான Jose Francisco B. Benitez அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, நிறுவன ரீதியான கூட்டுறவு மற்றும் தொழிலாளர் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தகைமைக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

இலங்கைத் தூதுக்குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பாஹேவா, பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி.எச். பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

​பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்

​ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (மார்ச் 08) நள்ளிரவு பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

​மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தை (NAIA) சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.

​இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

​அத்துடன், இந்த விஜயத்தின் இடையே பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார். இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன்சார் விடயங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

​பிரதமர் ஊடகப் பிரிவு

பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் - சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறுமனே சட்டப் புத்தகங்களுக்குள்ளோ அல்லது ஆவணங்களுக்குள்ளோ மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவற்றை இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“வளமான நாட்டின் அபிமானம் - அவளே நாட்டின் முன்னோடி” எனும் தொனிப்பொருளின் கீழான இம்முறை சர்வதேச மகளிர் தினத் தேசிய விழா, மார்ச் 08ஆம் திகதி மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சகல விதமான சுதந்திரங்களும் வரலாறு முழுவதிலும் பெண்கள் முன்னெடுத்த பாரிய போராட்டங்களினால் கிடைத்தவையாகும். இந்நாளை வெறும் பூங்கொத்துக்களுக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த உரிமைகளைப் பாதுகாத்து, எமது நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையைத் தற்போதைய நிலையை விடச் சிறந்த இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது உன்னத நோக்கமாகும்.

இந்நாட்டின் பெண் தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது. அவர்களைத் தேசிய பொருளாதாரத்தின் ஒரு செயற்திறன்மிக்க பங்காளிகளாக மாற்றுவதற்குத் தேவையான பின்னணியை அரசாங்கம் தயாரித்து வருகின்றது.

அதேபோல், குடும்பத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் பெண்கள் ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ மேற்கொள்ளும் அளப்பரிய அர்ப்பணிப்பை மதிப்பீடு செய்வதற்காக “தேசிய பராமரிப்புக் கொள்கை” (National Care Policy) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அண்மையில் முன்வைத்தது.

உலகில் இடம்பெறும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மனிதநேயத்திற்காகவும் அமைதிக்காகவும் முன்னிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருக்கின்றது. ஆகையினால் கருணையுடன் ஒன்றிணைந்து அமைதிக்காகக் குரல் எழுப்ப முன்வருமாறு இந்நாட்டுப் பெண்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இச்சபையில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள்,

இந்நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிந்திய கண்ணீர் மற்றும் வியர்வைக்குச் சரியான மதிப்பினை வழங்கும் யுகம் தற்போது உதயமாகியுள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும், எனக் கூறினார்.

இந்தத் தேசிய விழாவிற்கு இணைவாக, நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தொழில்முயற்சி வெற்றியாளர்களுக்குக் கௌரவ விருதுகளைப் பிரதமர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பிரதி அமைச்சரான வைத்தியர் நாமல் சுதர்சன, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிறிபால மானவடு, இலங்கைக்கான தூதுவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு