பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கோட்டே ரஜமகா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுர திறப்பு விழா ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுரத்தை மகாசங்கத்தினர், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த நாயக்க தேரர் நினைவு படிகத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு மலர் பூஜைசெய்து வழிபட்டதுடன், அந்த மண்டபத்தின் கீழ் தளத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய விகாரை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் லங்காராமய, இந்தியானா பௌத்த விகாரை, ஒஹியோவில் உள்ள பௌத்த மைத்ரீ தியான நிலையத்தின் விகாராதிபதியும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பிரதம சங்கநாயக்கருமான மங்கள தர்ம கீர்த்தி ஸ்ரீ தர்ம தூத சேவா பூஷண் தலங்கம தேவானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மேயர் அருஷ அத்தபத்து உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் திருமதி சி.ஏ.சி.ஐ. கொலொன்னே, மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் திரு. எம்.ஆர். ஹசன், துருக்கிக்கான தூதுவர் திரு. எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ, நேபாளத்திற்கான தூதுவர் திருமதி ருவந்தி தெல்பிட்டிய, கொரியக் குடியரசுக்கான தூதுவர் திரு. எம்.கே. பத்மநாதன் மற்றும் ஓமான் சுல்தானகத்திற்கான தூதுவர் திரு. டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்துதல், சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை உயர்த்துதல், மற்றும் தரமான முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் புதிய தூதுவர் குழுவினருக்குச் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் பொறுப்பேற்க இருக்கும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பிரதமர், அவர்களின் எதிர்காலப் பணிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’இது எமது காலம்’ நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் தற்போது கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள "இது எமது காலம்" என்ற நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் அருங்காட்சியகம், இதுவரை நாட்டின் 9 மாகாணங்கள், 10 மாவட்டங்கள் மற்றும் 11 நகரங்களை உள்ளடக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,. ஆகஸ்ட் 19 ஆந் திகதி முதல் கொழும்பில் அதன் முதலாவது கண்காட்சியை ஆரம்பித்தது. இது கொழும்பு பொது நூலக வளாகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, 1940கள் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் இந்த நாட்டின் வரலாற்றில் தேசம் மற்றும் தேசிய அடையாளத்தை கட்டியெழுப்புதல், மோதல்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

இதன் மூலம் வரலாறு என்றால் என்ன? அதை யார் எழுத முடியும்? வரலாற்றைக் கற்றுக்கொள்வதற்கான பல்வேறு வழிகள் என்ன? போன்ற விடயங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மற்றும் செயற்பாடுகள் மூலம், இந்தக் கண்காட்சி பிள்ளைகள் சிந்திக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நடமாடும் அருங்காட்சியகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட வரலாற்று உரையாடல் மற்றும் நினைவக கூட்டணி (CHDM) , இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்துடன் (SCOPE) இணைந்தும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தும் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு (GIZ) இலங்கை நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நிக்கோலஸ் லமாடே மற்றும் CHDM நிறைவேற்றுப் பணிப்பாளர் தனுஜா துரைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையின் புதிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாங்கள் எப்போதும் பொதுமக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம், எந்தவித பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆகஸ்ட் 22 ஆந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"ஒரு அரசாங்கமாக, ஐக்கியம், மரியாதை, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்க நாங்கள் எப்போதும் பாடுபடுகிறோம். மனித உரிமைகளை மதிக்கும் கலாசாரம் சமூகத்தில் ஒரு பொது இயல்பாக மாறாவிட்டால் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்கள் எவ்வளவு எளிதில் சரிந்துவிடும் அல்லது பலவீனமடையக்கூடும் என்பதை நாம் காணலாம். ஒரு அரசாங்கமாக நாம் கட்டியெழுப்பியுள்ள கொள்கைகளுடன் நாம் அதனை ஆரம்பிக்கலாம். பிரிவினை, வெறுப்பு அல்லது வன்முறையை விதைக்கும் கூற்றுக்களைத் தவிர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி உட்பட எங்கள் அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்தக் கொள்கையை தொடர்ந்து பேணி வருகின்றனர். இருப்பை அல்லது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இனவெறி, வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டுவதை நாட மாட்டோம் என்ற எங்கள் வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். பொதுமக்கள் உட்பட அனைவரினதும் கருத்துக்களுக்கு செவிமடுக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதன்படி, சரியாக செயற்படவும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவும் நாங்கள் பாடுபடுவோம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கலாநிதி நந்தா மாலனியை கௌரவிக்கும் விதமாக, இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆகஸ்ட் 22ஆம் திகதி வானொலி கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.

நம் நாட்டின் இசைத் துறைக்கும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி நந்தா மாலனி அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அளித்த பங்களிப்பை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். அவரை கௌரவிக்கும் விதமாக, வானொலி கூட்டுத்தாபனத்தின் ஒரு கலையரங்கம் அவரது பெயரால் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு, வானொலி கூட்டுத்தாபன வளாகத்தில் கலாநிதி நந்தா மாலனியின் உருவப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. வானொலி கூட்டுத்தாபனத்தின் 9வது கலையரங்கமே "கலாநிதி நந்தா மாலனி கலையரங்கம்" எனப் பிரதமர் மற்றும் கலாநிதி நந்தா மாலனி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

"அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறுமி "சிறுவர் மேடை" நிகழ்ச்சியில் பாடல்களைப் பாட இந்த வானொலி கூட்டுத்தாபனத்திற்கு வந்தார். அங்கு அவர் முதன்முதலாக ’துர பவனே மே குளு குவனே’ என்ற பாடலுக்கு குரல் கொடுத்தார். அவருடைய தனித்துவமான குரலின் திறமையைக் கண்டறிந்த கலாநிதி பண்டித் அமரதேவ அவர்கள், இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படமான ’ரன்முது தூவ’ திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். அந்தக் கிராமியச் சிறுமி, ’கலன கங்ககி ஜீவிதே தயாலு லோகயே’ என்ற அற்புதமான பாடல் வரிகளுக்கு இந்த வானொலி கூட்டுத்தாபன கலையரங்கத்தில் தனது குரலை இணைத்தார்.

"அன்று அந்தப் பாடலைப் பாடிய சிறுமியின் பெயரில் இன்று வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒரு கலையரங்கம் திறக்கப்படுவது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். அவரே தேசத்தின் பெருமைக்குரிய பாடகி கலாநிதி நந்தா மாலனி.

"நந்தா மாலனி என்ற பாடகி நமது இசைத் துறையில் வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. மாறாக, ’ரன்முது துவ’ திரைப்படத்தில் தொடங்கிய தனது இசைப் பயணத்தில், காதல், பிரிவின் துயரம் போன்ற வழக்கமான தலைப்புகளுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது, ஒடுக்குமுறை, ஊழல், வன்முறை, சமூக அநீதி போன்ற சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் தனது துணிச்சல்மிக்கக் குரலில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஒருபோதும் தயங்கவில்லை.

"கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அந்த ரசனை, உங்கள் பாடல்கள் மூலம் சிந்திக்கத் தூண்டிய விதம், இந்த நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் பாடல்கள் மூலம் எங்களை உற்சாகமூட்டிய உங்களின் உன்னத சேவைக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய பாதேகம ஞானேஸ்வர தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், சமன் மாக்சிமஸ் அடிகளார், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில்சேனவி, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர உள்ளிட்ட பல மூத்த கலைஞர்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு