பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, எதிர்காலத்திலும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், நீடித்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்த இலங்கை தனது பயணத்தைத் தொடர்ச்சியாக மீள்நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட உலகளாவிய போக்குகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், புற அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் நாட்டின் பின்னடைவைத் தாங்கும் திறனைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வர்த்தகம், முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியும் சமூகப் பாதுகாப்பும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்றும், இவை தனித்தனியாக வெற்றிபெற இயலாதவை என்றும் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சமநிலையை அடைவதற்கு, குறிப்பாகக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு போன்ற துறைகளில் வலுவான பொது உட்கட்டமைப்பு தேவை என்பதையும், பயனுள்ள சேவை வழங்கலைப் பாதிக்கும் தற்போதைய மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் Sonali Jain-Chandra, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் Evan Papageorgiou, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி Martha Woldemichael, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே. எம். ஏ. என். தௌலகல, மத்திய வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள், ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்பு வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்த அவர்களின் கலந்துரையாடலின் போது, பாலின அடிப்படையிலான வன்முறைகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய UNFPA பிரதிநிதிகள், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விரிவான கொள்கை ரீதியான தீர்வுகளை உருவாக்குவதில் தமது அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிக் கூறினர்.

இலங்கை பல முக்கிய குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும், அந்தச் சாதனைகளைத் தக்கவைப்பதும் அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல், நன்கொடையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி Aleksandar Sasha Bodiroza, UNFPA இன் பதில் பிரதிநிதி Phuntsho Wangyel உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சசிகா சோமரத்ன மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையில் ஜூன் 29 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமரை, விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் வரவேற்றார். தேரருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய பிரதமர், விகாரையின் போதி மலுவவிற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்த பிரதமர், தர்ம பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரளஸ்கமுவ நகர சபைத் தலைவர் நிஷாந்த வெதமுல்ல உள்ளிட்ட முக்கிய அதிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பௌதிக வளங்களை மேம்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒவ்வொரு பிரஜையின் இதயங்களிலும் சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி சாத்தியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த “அநுபுத்தாபி வந்தனா” பொசன் மகா பெரஹர அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக ஜூன் 28 ஆம் திகதி கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

மிஹிந்து மகா ரஹத் தேரரின் இலங்கை வருகையுடன், இலங்கையர்களுக்கு உன்னதமான சத்தர்மம் மட்டுமன்றி, உயர்ந்த கலாசார விழுமியங்கள், மனித நேயப் பண்புகள் மற்றும் தசராஜ தர்மத்தினால் போஷிக்கப்பட்ட அரச ஆட்சி முறைமை ஆகியன உரித்தானது. எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த தர்ம ஒளியினால், அற்புதமான நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், விண்ணைத் தொடும் மகா தூபிகள் ஊடாகச் சிங்களவர்களின் படைப்பாற்றல் திறமையை உலகிற்கே பறைசாற்ற முடிந்திருக்கின்றது.

உலகின் வேறெந்த நாட்டிலும் காண முடியாத, எமது பிரதான கலாசாரத் திருவிழாவான ஸ்ரீ தலதா பெரஹரவிற்கு இணையாக நடத்தப்படும் ’அநுபுத்தாபி வந்தனா’ பொசன் மகா பெரஹர போன்ற நிகழ்வுகள், நாட்டிற்குத் தேவையான உண்மையான அபிவிருத்தியை எட்டுவதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன.

நமது நாட்டின் பெருமைமிக்க பெரஹர கலாசாரத்தை வெளிப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், பிறரை மதிக்கும், சகோதரத்துவத்துடன் கூடிய, பொது நோக்கங்களுக்காகக் கூட்டு உணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு எதிர்காலச் சந்ததியை நாட்டில் உருவாக்க வழி பிறக்கும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலி வீரசேகர, திவுலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு, 2026 ஜூன் 28 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் இந்த பொசன் வலய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி, வணக்கத்துக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் சமய வழிபாடுகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்களும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, பொசன் வலயத்தைத் திறந்து வைப்பதற்கான செய்தியடங்கிய பெட்டகத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சாரணர் இயக்கத்தைப் பாடசாலைக் கட்டமைப்பினுள் மேலும் விரிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என்றும், இவ்வாறான சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் ஊடாக சமூகத்திற்குச் செய்யப்படும் சேவைகளைத் தாம் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பொசன் வலயமானது ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களிலும் மாலை 6.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். அதற்கமைய, கொழும்பு 02, சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை சாரணர் தலைமையக வளாகம் உள்ளிட்ட, லேக்ஹவுஸ் வட்டத்திலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகம் வரையிலான எல்லைக்குள் இந்த பொசன் வலய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, முப்படை மற்றும் பொலிஸ் பிரதானிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும்.

பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் ஒரு மதம்சார்ந்த நிகழ்வு மாத்திரமல்ல, ஒரு தேசத்தின் சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். மஹிந்த மஹ ரஹத் அவர்களின் இலங்கை வருகையினால் இந்த நாட்டிற்குப் பரிசாகக் கிடைத்த பௌத்த தத்துவமானது, பல நூற்றாண்டுகளாக எமது தேசிய அடையாளத்தை வடிவமைத்துவரும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறியுள்ளது.

உண்மையான அபிவிருத்தி மனிதனின் மனதிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை பொசன் பௌர்ணமி எமக்கு நினைவூட்டுகிறது. கருணை, இரக்கம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற உன்னதமான பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றி அமைக்க முடியுமாயின், அமைதியான, நீதியான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதானது எமக்கு இலகுவானதாக அமையும்.

இன்று எமது நாடு புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு புதிய பாதையை அடைந்திருக்கின்றது. அந்தப் பயணத்தை வெற்றிகொள்ள பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது, ஒழுக்க விழுமியங்களால் செழுமைப்படுத்தப்பட்ட சமூகமும் அவசியமாகின்றது. பொசன் பௌர்ணமியின் உண்மையான சாரமாகிய ஒழுக்கம், அகிம்சை மற்றும் மனிதநேயம், ஆகியன மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நீதியான, சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கினை அடைவதற்கான வழிகாட்டிகளாகும்.

மலர்ந்திருக்கும் இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, அனைத்து பௌத்த மக்களின் வாழ்விலும் அமைதி, நிம்மதி, அறிவு மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு புண்ணியகரமான நாளாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு