பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. - NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்தை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அங்கீகரித்துள்ளன

இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

“நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் இந்த சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. “அறியப்படாதவற்றின் எல்லை: ஆபத்து, தீர்வு, புதுப்பிப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, துரிதமாக மாறிவரும் உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உலகளாவிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் புத்தாக்குனர்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.

பிரதமர் தனது உரையில், இலங்கையின் ஜனநாயக எழுச்சி, பொருளாதார மீட்சி மற்றும் இந்தியாவுடனான கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்தார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கடந்து செல்வதில் பொறுப்பான தலைமைத்துவம், மீளாற்றல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அண்மையில முகம்கொடுத்த நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கு இலங்கை ஒரு சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான மக்களின் கோரிக்கையின் பேரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றமை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு, சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை எடுத்துக் காட்டிய பிரதமர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கையின் நிதி ஒருங்கிணைப்பை அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக அங்கீகரித்துள்ளன என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது - தற்போது இது சுமார் 10% ஆகும்- மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையக சமூக உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரது குரல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம், அண்டை நாடாக இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் முக்கிய ஆதரவையும், எரிசக்தி, இணைப்பு, கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவின் தொலைநோக்குடன் இணைந்து இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை பெறுமான சங்கிலிகளுடன் இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம்.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் GovPay, e-அடையாள முறைமைகள் (e-identity systems) மற்றும் திறந்த தரவு வாயில்கள் (open data portals) போன்ற முயற்சிகளை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனினும் சட்டங்களால் மட்டும் நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது - பெறுமானங்களும் சமூக நெறிமுறைகளும் அவசியம் என்பதை எமது அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளது.

தெற்காசியா முழுவதும் உள்ள இளைஞர்களை விளித்துப் பேசிய கலாநிதி அமரசூரிய, புத்தாக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல், நியாயமான, உள்ளடக்கிய மற்றும் மனிதாபிமான முறைமைகளை வடிவமைக்கும் தார்மீக அம்சமாகவும் பார்க்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

இலங்கையில் ஒரு நல்ல சமூகத்தையும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதற்கும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை புது டில்லியில் சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (2025 ஒக்டோபர், வெள்ளி 17) இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை புது டில்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அன்புடன் வரவேற்றதுடன், இருதரப்பு உறவுகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக கூட்டாண்மைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் அவரது இந்த விஜயத்தைப் பாராட்டினார்.

பிரதமர் அமரசூரிய, 1990களின் முற்பகுதியில் ICCR புலமைப் பரிசில் மாணவியாக இருந்த டில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரிக்கு மேற்கொண்ட தனது உணர்ச்சிபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் பயணத்தின் விபரங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.

புத்தாக்க கல்வி நடைமுறைகளைக் கண்டறிவதற்கான அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பாக, டில்லியில் உள்ள ஒரு மாதிரிப் பாடசாலைக்கு முன்னதாக தனது வருகையின் முக்கிய விடயங்களையும் அவர் இந்தியப் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி இலங்கையின் கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இளைஞர்கள், குறிப்பாக பாடசாலையை விட்டு இடைவிலகியவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஆண் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அதிகரித்து வரும் தேவையை வலியுறுத்தி, உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வி முறையை உருவாக்குவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டார்.

இரு நாடுகளிலும் மீனவர்களின் நலன் தொடர்பான விடயங்கள் குறித்தும் இரு பிரதமர்களும் கலந்துரையாடியதுடன், இரு தரப்பிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி அமரசூரிய வலியுறுத்தினார்.

இரு நாடுகளின் பகிரப்பட்ட அபிவிருத்திப் பயணத்தில் கூட்டாண்மையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை முயற்சியை முன்னெடுப்பதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். அனுராதபுரத்தில் உள்ள புனித நகர வளாகத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அன்பான வாழ்த்துக்களை இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதுடெல்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளைப் பிரதமர் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஒக்டோபர் 16, 2025 ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பானது, இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வலுசக்தி, விவசாயம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, நிதித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக அபிவிருத்தி, திறமை வளர்ப்பு மற்றும் புத்தாக்கம், ஆரோக்கியச் சுற்றுலா, உர உற்பத்தி மற்றும் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மயமாக்குதல், மற்றும் திறமை அபிவிருத்தி ஆகிய முயற்சிகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, அறிவுசார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் உறுதிப்பாட்டினை எடுத்துரைத்தார். எதிர்காலத்திற்குத் தகுந்த பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கையின் புதிய கல்வி மற்றும் புத்தாக்கக் கொள்கைக் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, STEAM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) துறைசார் கல்வி மற்றும் திறமை அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது என்பதைப் பிரதமர் விளக்கிக் கூறினார்.

குறிப்பாக உற்பத்தி, உள்கட்டமைப்பு, கல்வித் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய துறைகளில் இலங்கையுடனான தமது ஈடுபாட்டை விரிவுபடுத்துமாறு பிரதமர் இந்திய வர்த்தகத் துறைக்கு அழைப்பு விடுத்தார். மேலும், AI மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பு, தொழில்சார் பயிற்சி, கல்வித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் கூட்டுறவையும் கற்றல் மாதிரிகளின் அவசியத்தையும் முன்மொழிந்தார்.

விவசாயப் புத்தாக்க அமைப்புகள், உரத் தொழில்நுட்பம், ஆரோக்கியச் சுற்றுலா முயற்சிகள் மற்றும் இலங்கையின் நிதிச் சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சாதகமான ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இலங்கையின் கேந்திரோபாய கவனம் செலுத்தப்பட்டிருப்பதைப் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டளவில் 200,000 நிபுணர்களைக் கொண்ட திறமையான தொழிலாளர் படையினை உருவாக்கலும், 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் துறைசார் ஏற்றுமதியையும் இலக்காகக் கொண்டு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பெற வேண்டிய தனியார் துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பில் வேரூன்றிய நீண்டகால இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன எனத் தெரிவித்தார். மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் மையமாக உள்ளது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

கல்லூரி நிர்வாகம், துறைசார் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் ஆகியோர் பிரதமரை அன்புடன் வரவேற்றனர். பிரதமரின் வெற்றிகளைப் பாராட்டும் வகையில், கல்லூரி நிர்வாகம் “ஹரிணி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை" திறந்து வைத்தது.

அதையடுத்து, பிரதமர் தான் ஒரு காலத்தில் கல்வி கற்ற வகுப்பறைகளுக்கு மீண்டும் விஜயம் செய்தார். அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைப் பிரதமர் சந்தித்தார்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு மேற்கொண்டிருக்கும் அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஒக்டோபர் 16, 2025 ஆம் திகதி புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களைச் சந்தித்தார்.

இதன் போது நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், பொருளாதார ஒத்துழைப்பு, தொடர்பாடல், டிஜிட்டல் பரிவர்த்தனை, கல்வி மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் உறவுகள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவினை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

அத்தோடு கடல்சார் இணைப்பு, மின்சாரம், வலுசக்தி, வர்த்தகம், மற்றும் கல்வித் துறைச் செயல்திட்டங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளையும், நிதி ரீதியாகப் பெற்றுத்தரும் ஒத்துழைப்பினையும் பிரதமர் பாராட்டினார்.

சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா பெற்றுக் கொடுத்த ஆதரவுகளை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கைக்கு நெருங்கிய நேச நாடு என்ற வகையிலும், பிராந்தியத்தின் நீண்டகாலப் பங்காளர் என்ற வகையிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்தாலோசித்தனர். உற்பத்தி, உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் அறிவுசார் சேவைகள் ஆகிய துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை ஆரம்பித்தார் 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக, ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.

புதுடெல்லி சென்றடைந்த பிரதமரை, இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் திருமதி. மஹிஷினி கொலொன்னே மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட இந்திய அரசியல் தலைவர்களுடன் இலங்கைப் பிரதமர் மேற்கொள்ள இருக்கின்றார்.

NDTV உலக மாநாடு 2025 இல் பங்கேற்கும் பிரதமர் அதில் முக்கிய உரையை ஆற்ற உள்ளார். இந்த மாநாடானது உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க வழிவகுக்கும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சராக, பிரதமர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி, மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) பழைய மாணவியான இலங்கைப் பிரதமர், இந்த விஜயத்தின் போது தனது பழைய கல்லூரிக்கும் விஜயம் செய்ய உள்ளார். அத்தோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக நிகழ்விலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயமானது, இலங்கை-இந்திய உறவுகளின் நீடித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மை மற்றும் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிரதமர் ஊடகப் பிரிவு