யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியும் அப்பிரதேசங்களில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போர் நிகழ்ந்த பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் இயல்பான வாழ்க்கை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்துத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பலை மற்றும் பூனகரி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பின் போது நேற்று (19) ஆந் திகதி பிரதமர் இதுபற்றி தெரிவித்திருந்தார்.

அதன்போது மேலும் தெரிவிக்கையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

“ கிளிநொச்சி மாவட்டம் என்பது யுத்தம் நடைபெற்ற காலம் பூராகவும் பாதிப்பிற்கு உட்பட்ட மக்கள் வாழ்கின்ற மாவட்டமாக உள்ளதோடு, யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற அதிகமானோரும் இங்கு வாழ்கின்றார்கள். இளைய தலைமுறையினரின் பெற்றோர்களில் அதிகமானோர் அக்காலத்தில் நடைபெற்ற போரினால் அங்கவீனமுற்றவர்களாகவே காணப்படுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்ற பெண்களில் அநேகமானோர் நுண்நிதிக் கடன்களைப் பெற்று மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அவர்கள் அந்நிதியை தங்களது குடும்பத்திற்காக அல்லது பிள்ளைகளின் படிப்பிற்காக பெற்றிருப்பார்கள்

ஒரு சில பிரதேசங்களில் இறுதிச் சடங்கை மேற்கொள்வதற்கான மயானங்கள் கூட காண்பதிற்கில்லை. அது மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.

ஒரு சில பிரதேசங்களில் குடி நீர்ப் பிரச்சினை உள்ளது. அதில் உப்புத் தன்மை கலந்திருப்பதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோன்று பிள்ளைகளுக்குச் செல்ல நல்ல பாடசாலைகளும் இல்லை.

இவையனைத்தும் பெரிய பிரச்சினைகளில்லை. இப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க நம்மால் முடியும். ஆனால் முன்னைய ஆட்சியாளர்கள் இவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் நீங்கள் இவ்வாறு துன்பப்படுகின்றீர்கள்.

16 ஆண்டுகளின் பின்னர் யுத்தத்தினால் அழிவுற்றிருந்த தென்னை மரங்கள், பனை மரங்கள் மீண்டும் வளர்ந்திருப்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால், அதனை விட இந்தப் பிரதேசங்களில் எவை மாறியிருக்கின்றன? மக்களின் வாழ்வாதாரம் மாறியிருக்கிறதா? யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராயும் போது அவற்றைத் தெளிவாக அறிந்து அப்பிரதேசங்களின் பால் விசேட கவனம் செலுத்தப்படுவது அவசியமாக உள்ளது.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள், வாழ்வாதாரம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை யுத்தம் முடிவடைந்து பல வருடங்களாகியும் அவை நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதற்காக பிரதேச மட்டத்தில் சரியான தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான தேவை கடுமையாக உணரப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில், சுற்றுலாத்துறையின் பால் ஈர்ப்படுகின்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்து பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அவ்வாறு பலமானதொரு அபிவிருத்தியடைந்த பிரதேச சபைகளையும், நகர சபைகளையும் கட்டியெழுப்பும் நோக்கில் மக்களுக்கு செவிசாய்க்கக்கூடிய, மக்களுக்காக செயற்படக்கூடிய தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கிராமத்தை பலப்படுத்துவதற்கு மக்களுக்கு ஒன்றிணையுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இலங்குமரன், கருணானந்தன் ஆகியோர், கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பல பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

பிரமர் ஊடகப் பிரிவு