பிரதமரின் தாய்லாந்து விஜயம் தொடர்பாக...

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் விழா இந்த ஆண்டு தாய்லாந்தின் ஆயுத்தயா நகரில் நடைபெற்றது. விழாவின் முக்கிய உரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமருடன் அநுநாயக தேரர்கள் உட்பட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விஜயத்துக்கான அனைத்து பயணச் செலவுகளையும் தாய்லாந்து அரசு ஏற்றுக்கொண்டது.

இந்த விஜயத்திற்காக மே மாதம் 31 ஆம் திகதி ஸ்ரீ லங்கன் விமானத்தில் புறப்படும் வரை பிரதமர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்காக ஒதுக்கப்பட்ட விசேட பிரமுகர்களுக்கான (VVIP) ஓய்வறையில் தங்கியிருந்தார். பிரித்தானியப் பிரஜையான அஜான் பிரம்மவன்ச தேரரும் அன்றைய தினம் சிங்கப்பூர் விமான சேவைக்கு செந்தமான விமானத்தில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து பிரமுகர்களுக்கான ஓய்வறையில் தங்கியிருந்துள்ளார். ஒரு பிரமுகரின் வருகையால் அஜான் பிரம்மவன்ச தேரர் சுமார் 12 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரமுகர் பிரதமர் எனவும் அண்மைய நாட்களில் ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியாகின. இது விளக்கம் இல்லாமல், முறையான விசாரணை இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டாகும். அஜான் பிரம்மவன்ச தேரர் பிரமுகர் ஓய்வறைக்கு வருகை தந்த அதேவேளை பிரதமர் விசேட பிரமுகர் ஓய்வறையில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் பண்டிகைக்கான அழைப்பை உத்தியோகபூர்வ விஜயமாக ஆக்கிக் கொண்ட பிரதமர், இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல வெற்றிகளை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவும் வழிசெய்தார். அவற்றில் இலங்கையின் இரத்தினக் கற்களை மெருகூட்டவும் அவற்றை விற்பனை செய்யவும் தாய்லாந்தில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிறுவனமான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ, தாய்லாந்து மன்னர் மகா விஜயலோங்கோர்ன் மற்றும் மகா நாயக்க தேரர்களை சந்தித்த பிரதமர், மிகவும் வேலைப்பளுவான நிகழ்ச்சி நிரலுடன் மூன்று நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருந்தார். பல்வேறு நாடுகளின் சங்கராஜ தேரர்களையும், தூதுக்குழுத் தலைவர்களையும் சந்தித்த பிரதமர், சியம் மகா நிகாயவை ஸ்தாபிப்பதற்கு வருகை தந்த, அயுத்தயாவில் உள்ள உபாலி சங்கராஜ தேரர் வசிக்கும் விகாரை மற்றும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

அந்த மூன்று நாட்களிலும், இலங்கை மற்றும் தாய்லாந்து பாதுகாப்புப் படையினரின் உயர் பாதுகாப்பின் கீழ் பிரதமர் செயற்பட்டிருந்த போதும், இது தொடர்பாக யூடியூப் சேனல்களில் வெறுப்பூட்டும் வகையில் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. பிரதமர் மீது சுமத்தப்படும் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறோம்.

நாட்டிற்குப் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து, பல நெருக்கடிகளை எதிர்கொண்டு எழுச்சி பெற்றுவரும் நாடு என்ற வகையிலும், பௌத்த நாடு என்ற வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் பண்டிகையின் ஊடாக இலங்கையின் அந்தஸ்தை மேலும் உயர்வடையச் செய்தவராக கடந்த 3ஆம் திகதி பிரதமர் நாட்டை வந்தடைந்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு