சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை...

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) இன்று (2024.05.02) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, 2024 மார்ச் மாதம் பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் தெரிவித்தார். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். பிரதமர் திணேஷ் குணவர்தன மற்றும் சீனப் பிரதமர் லீ கியாங் முன்னிலையில் இது கைச்சாத்திடப்பட்டது.

தூதுவர் சி சென்ஹொங் உடனான பேச்சுவார்த்தையின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக, பொருளாதார பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வாக சீனாவிடமிருந்து நேரடி தனியார் முதலீட்டையும், விவசாயம், மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளையும் இலங்கை எதிர்பார்க்கிறது என்று பிரதமர் கூறினார்.

கடினமான நிலைமைகளை வெற்றிகொள்வதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட தூதுவர் Qi Shenhong , கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கும் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சீன பொருளாதார ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு