வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி (World Bank), மற்றும் ஐக்கிய நாடுகள் திட்டச் சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன் போது உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி, தினசரி சரியான நேரத்தில் வினைத்திறன்மிக்க முடிவுகளை எடுப்பதற்கு, முறையான தகவல் மற்றும் தரவு சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு முயற்சிகளை வழிநடத்துவதற்கு துல்லியமான தரவுப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதன்போது, UNDP-இன் பேரிடருக்குப் பிந்தைய மதிப்பீடு (Global Rapid Post-Disaster Damage Estimation - GRADE) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தேவை மதிப்பீட்டுச் செயல்முறையை சர்வதேசப் பிரதிநிதிகள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். இது புவியியல் தகவல் தொழில்நுட்பம் (GIS), செய்மதிப் படங்கள் (satellite imagery) மற்றும் தரைமட்டத் தரவுகளை ஒருங்கிணைத்து, பேரிடருக்குப் பிந்தைய நிகழ்நேரத்தில், நடைமுறைப்படுத்தக்கூடிய நுண்ணறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்ட இடங்கள், சமூகங்கள், உள்கட்டமைப்புச் சேதங்கள், கழிவுகளின் அளவு பற்றிய மதிப்பீடுகள் மற்றும் நிலப்பயன்பாட்டின் மாற்றங்களை அடையாளம் காண்பதற்கு இது மிகவும் அவசியமான தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய UNDP பிரதிநிதிகள், அனர்த்தத்திற்குப் பிந்தைய தீர்வுகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் நெருக்கமாக ஒத்துழைக்கவும், தொடர்ச்சியான பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் கலாநிதி கெவோர்க் சர்க்ஸ்யன் Dr. Gevorg Sargsyan, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா Ms. Azusa Kubota, ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகள் அலுவலகத்தின் (UNOPS) தெற்காசியப் பணிப்பாளர், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. சாகரிகா போகஹாவத்த மற்றும் தேசியத் திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு