சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி மகா நாயக்க தேரரின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

இலங்கையில் புத்த சாசனத்தின் உயர்வுக்காக பெரும் பணியாற்றிய ஸ்ரீ அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரரும், கலபாலுவ ஸ்ரீ கோதம தபோவனய விகாரையின் தலைமை தேரருமான மஹாவிஹார வம்சாலங்கார சாசன விபூஷன், அமரபுர கணபமோக்காச்சாரிய, கல்யாணிவம்ச கீர்த்தி ஸ்ரீ வங்கீசவாசலங்கார விபஸ்ஸன கம்மட்டானாச்சாரிய, மஹாமஹோபாதயாய, அக்கமகாபண்டித சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி மகா நாயக்க தேரரின் மறைவு நாட்டுக்கும் பெளத்த சாசனத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்

சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி மகா நாயக்க தேரர் பல சமூக, சமய மற்றும் கலாசார விழுமியங்களை சமூகமயப்படுத்துவதில் முனைப்போடு ஈடுபட்டிருந்தார். தொடம்பஹல மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், உயர் கல்விக்காக மாத்தறை வீரபா பிரிவேனா மற்றும் காலி வித்யாலோக பிரிவேனாவுக்குசென்றார். அவர் சிங்களம், பாலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் வரலாறு, தொல்பொருளியல் மற்றும் அபிதர்மம் போன்ற துறைகளிலும் நிபுணத்துவம்பெற்று விளங்கினார்.

"கோதம தபோவனய" தியான நிலையம் தேசத்திற்கான ஒரு உன்னதமான கொடையாக விளங்குகிறது. இது பௌத்த சாசனத்தைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் முழு சமூகத்திற்கும் புத்த பெருமானின் போதனைகளின் பால் வழிகாட்டும் முக்கிய மையமாக திகழ்கிறது.

சங்கைக்குரிய மகாநாயக்க தேரரை நான் சந்தித்த போது அவர் வழங்கிய அறிவுறுத்தல்களையும், மக்களின் பாதுகாப்பையும் சம்புத்த சாசனத்தின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக அவர் வழங்கிய தொடர்ச்சியான ஆலோசனைகளையும் தேசத்தின் பெயரால் நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

பௌத்த தர்மத்தைப் பரப்பும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி மகாநாயக்க தேரருடன் தொடர்புடைய தேரர்களுக்கும், உறவினர்கள், பக்தர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமரபுர மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி மகாநாயக்க தேரர் முடிவான நிர்வாண அருளைப் பெற பிரார்த்திக்கிறேன்!

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2023 மே 19