இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை தொடர்பான சட்டதிட்டங்களை திருத்தி, சலுகைகள் மற்றும் வரி விதிப்புகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி தயாராக உள்ளார்...
இன்று (2024.06.29) இரத்தினபுரி மாவட்டத்தில் முதல் தடவையாக பெல்மடுல்ல சில்வர் ரே ஹோட்டலில் நடைபெற்ற "சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சி -2024" இல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்
தேயிலை, தென்னை, இரப்பர் போன்றவற்றை விட இரத்தினங்களுக்கு நம் நாடு புகழ் பெற்றிருந்தது. முற்காலத்தில் நம் நாட்டின் இரத்தினங்கள் பல்வேறு நாட்டு அரசர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தன. நமது இரத்தினங்கள் புனிதமான மற்றும் உன்னதமான மதிப்பைக் கொண்டிருந்தன. ஆனால், இரத்தினங்களால் யாரும் நம் நாட்டைக் கைப்பற்ற வரவில்லை. வேறு பொருட்களைப் பெற்றுக்கொள்ளவே எங்களை ஆக்கிரமித்தார்கள். அதன்பிறகு, தேயிலை, தென்னை மற்றும் இரப்பர் ஆகியவை நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களாக பங்களித்தன. கிராமங்களை மாற்றி, நாட்டின் புவியியல் வரைபடத்தை மாற்றி தேயிலை, தென்னை, இரப்பர் பயிரிடப்பட்டது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக நாம் அதனை செய்து வருகிறோம்.
ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் போது, ஆடைத் தொழில் மற்றும் சுற்றுலாத் தொழில் நிறுவப்பட்டது. தென்னை இரப்பரைத் தவிர, அந்த இரண்டு புரட்சிகளைப் பற்றி மட்டுமே நாம் பேச முடியும். ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியைப் பெற புதிய கதவுகளைத் திறக்க வேண்டும். இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண தொழிலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய இரண்டு வாயில்களை விட இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் அதிக அழுத்தம் கொடுத்தால், அதிக அளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும்.
இது அரசின் வழிகாட்டுதலுடனும் பங்கேற்புடனும் தனியார் துறையால் முன்னோக்கி கொண்டு வரப்பட்ட தொழில். மேலும் ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொண்ட, பல்வகைத்தன்மை கொண்ட மற்றும் பல்வேறு துறைகளில் மதிப்பை உருவாக்கப் பயன்படும் ஒரு தொழில்.
இந்தத் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தத் துறை தொடர்பான சட்டதிட்டங்களைத் திருத்துவதன் மூலம் இத்தொழில்துறையினர் எழுந்து நிற்பற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித்தருமாறு கேட்கப்பட்டுள்ளது. தேவையான நிவாரணங்கள் மற்றும் வரி விதிப்புகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த ஜனாதிபதி தயாராக உள்ளார். எங்கள் கைகளால் செய்யப்பட்ட நகைகளுக்கு நல்ல கேள்வி உள்ளது. இத்துறையில் அயல் நாடுகள் ஏற்கனவே முன்னேறிச் சென்றுள்ளன. இன்று உலகம் எம்முடன் கொடுக்கல் வாங்கல்களை செய்கிறது. பொருளாதார வளர்ச்சிக்காக செய்த தியாகங்கள் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதனால்தான் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் தொழிலை உயர்த்த அரசு துணை நிற்கிறது.
இரத்தினபுரி என்றதும் இரத்தினங்களுக்கும் வெள்ளத்திற்கும் பெயர் பெற்றது. வெள்ளத்தின் போது பொதுமக்களும் இரத்தினக்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் என்ன செய்ய முடியும்? இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி புதிய திட்டம் தொடங்க வேண்டும்.
80 காட்சிக்கூடங்களைக் கொண்ட இந்த சர்வதேச கண்காட்சியில், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர் சமூகத்தினர் பங்கேற்றனர்.
ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா, யதாமினி குணவர்தன, மர்ஜான் பளீல், வருண லியனகே,
சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய, கைத்தொழில் அமைச்சின் செயலாளர், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு