டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... - ஆளுநர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (25.05.2023) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளுநர்களிடம் தெரிவித்தார்.

ஆளுனர்கள், மாகாண சபை செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், டெங்கு பரவல் தொடர்பான தகவல்களை சேகரித்து நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதால், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமானது என குறிப்பிட்டார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாகாணங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆளுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பெருகும் நிலை காணப்படுகின்றமையினால் அவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் விசேட பங்களிப்பு இதற்கு கிடைத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.