நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் கலந்துரையாடல்..

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொகயாமா மற்றும் இலங்கைக்கான புதிய பணிப்பாளர் தகஃபுமி கடோனோ ஆகியோர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (08)கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தனர்.

புதிய பணிப்பாளர் நாயகத்தை வரவேற்ற பிரதமர், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக தனது பதவிக்காலத்தை முடித்துச் செல்லும் பணிப்பாளர் நாயகம் திரு சென் சென் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்திற்குள் மீண்டு வருவதற்கு உதவிய குறுகிய கால, உடனடி ஆதரவிற்காக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு (ADB) பிரதமர் நன்றி தெரிவித்தார். நாட்டின் நிதி வாய்ப்புகள் மற்றும் வினைத்திறனான பொது நிதி முகாமைத்துவ முறைமையை வலுப்படுத்தவும், அத்துடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சித் துறைக்கு தேவையான நிதி அணுகலை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் நிதியானது 380 மில்லியன் டொலர்களை பயன்படுத்தியது. மூலதனச் சந்தையின் வளர்ச்சிக்கான வரவு செலவுத்திட்ட உதவியாக மேலும் 250 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டது.

உரங்கள், மருந்துகள் மற்றும் நீர் சுத்திகரிப்புக்கான இரசாயனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு மூலதன ஆதரவை வழங்கவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைக்க பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 333 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவிகள் பற்றி பிரதமர் விசேடமாக குறிப்பிட்டார்.

கெனிச்சி யொகோயாமா, இலங்கைப் பொருளாதாரம் இயல்பு நிலையை அடைந்திருப்பதை பாராட்டியதுடன், பொருளாதார முன்னேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் இடைக்கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நான்கு ஆண்டு கால காலப்பகுதியில் ஆதரவை வழங்குவதற்கான திட்டங்களை அவர் விளக்கினார். இதன் மூலம் கிடைக்கும் ஏனைய உதவிகளில் விசேட கொள்கைகளின் அடிப்படையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நடைமுறைப்பபடுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ், பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆண்டுதோறும் துரிதப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் ஆகியோர் பங்குபற்றினர்.