காலம்சென்ற பேராசிரியர் நளீன் டி சில்வாவுக்கு பௌத்த மகா சம்மேளனத்தில் சமய சடங்குகள்...

மறைந்த கலாநிதி நளீன் டி சில்வாவுக்கு அகில இலங்கை பௌத்த சம்மேளன தலைமையகத்தில் இன்று (2024.05.05) நூறு பிக்குகள் பங்கேற்ற பாங்சுகுல பிங்கம் நிகழ்வு நடைபெற்றது.

சங்கைக்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலையீட்டில் அனைத்து தேசிய அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

அங்கு உரையாற்றிய பிரதமர்-

தேசத்தை எழுச்சிபெறச்செய்த கலாநிதி நளின் டி சில்வா எம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். பௌத்த தர்மத்தை ஒரு சாதாரண மனிதராக நம் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டிய உன்னதமானவர்.

பௌத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் துணிச்சலுடன் தம்மை அர்ப்பணித்த எமது பௌத்த தலைவர்களில் ஒருவர்.

அவரது மரணம் நம் நாட்டில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம் மட்டுமல்ல, இந்த நேரத்தில் பௌத்தர்களாகிய நாம் ஒன்றிணைந்து இந்த புண்ணிய நிகழ்வை ஏற்பாடு செய்தமை அவருக்கு செய்த மரியாதையும் பெருமையும் ஆகும்.

தேசத்தின் பெருமைமிக்க தலைவர் என்ற முறையில் அவர் அச்சமின்றி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

தேசத்தின் இருள் சூழ்ந்த காலகட்டத்தில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். தேசத்தை உயிர்ப்பித்து எழுச்சியூட்டினார். அந்த உன்னத உரைகளால் நாடு மீண்டும் மீண்டும் எழுச்சிபெற்றது.

மேலும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதில் நளின் டி சில்வாவின் குரல் மட்டுமன்றி, அவர் எழுதிய ஆக்கப்பூர்வமான, தர்க்கரீதியான கட்டுரைகளும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான பல்வேறு வயதுப் பிரிவினரின் வாசிப்புக்காக சேகரமாகின.

இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக கலாநிதி நளின் டி சில்வாவின் இவ்வாறான முன்வைப்புகளுக்கு இன்றுள்ள அனைத்து பிரதான பத்திரிகைகளும் இடமளித்தன.

அதனால்தான் நாட்டு மக்களுக்கு மேலும் பலம் தரக்கூடிய வழிகாட்டல்களை வழங்கும் வாய்ப்பு நளின் சில்வா அவர்களுக்குக் கிடைத்தது.

ஒருமித்த நாட்டிற்கு அச்சுறுத்தலாக கடந்த காலத்தில் மிக ஆபத்தான சூழலை நம் நாடு எதிர்கொண்ட போது, அவர் முன்வந்து வழிகாட்டினார். நாங்கள் உட்பட தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தலைவர்களுடனும் கைகோர்த்து செயல்பட்டதன் மூலம், அதை மாற்றியமைக்க மகத்தான வழிகாட்டுதலை வழங்கினார்.

தோல்வியுறச் செய்யமுடியுமான தேச விரோத சக்திகளை தோல்வியுறச் செய்வதற்காக எதிரிகளுடன் கருத்து ரீதியாக மோதினார்.

இந்த விடயத்தை மாற்றியமைக்க முடியும் என்ற கருத்தையும், நம் நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று கூறி நமது முப்படைகளின் மன உறுதியை கட்டியெழுப்பியதை மரியாதையுடன் இந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

சிங்களம், பௌத்தம் மற்றும் சாசனத்தைப் பாதுகாப்பதில் கலாநிதி நளிந்த சில்வாவினால் முன்வைக்கப்பட்ட "மகே லோகய" போன்ற ஆக்கங்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு நீங்கள் வழங்கிய தேசியப் பணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வுலக வாழ்க்கைப்பயணத்தின் முடிவில் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்ட கலாநிதி அவர்கள், அதனை நாட்டு மக்களுக்குப் புரியவைக்க விமர்சனங்களுக்கு மத்தியிலும் நீண்ட காலம் அதற்காக செலவிட்டார்.

அவர் எமது தேசிய நாயகன். அவர் எமது பௌத்த தலைவர். எனவேதான் இந்த நிகழ்வை இங்கு நடாத்த பௌத்த சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது. அவரது உடல் இதுவரை நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், அஸ்தி நாட்டு மக்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டு வரப்படும்.

நளின் சில்வா அவர்களுடன் இணைந்து நெருங்கிப் பணியாற்றியதன் மூலம், இக்கட்டான காலகட்டங்களில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை நாம் பெற்றோம். இந்த நேரத்தில், முழு தேசத்தினதும் சிங்கள இனத்தினதும் இருப்புக்கும், பௌத்த சாசனத்தின் இருப்புக்கும், இந்த நாட்டை எதிர்காலத்திற்காக பாதுகாப்பதற்கு அவர் வழங்கிய வழிகாட்டலுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

கலாநிதி நளின் டி சில்வாஅவர்களுக்கு நித்திய சுகம் கிட்டட்டும்!!

அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித மஹாநிகாயவின் மகா நாயக்க தேரர் ராஜகீய பண்டிதர் சாஸ்திரபதி திருகுணாமலயே ஆனந்த தேரர், சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரர், சங்கைக்குரிய பெங்கமுவே நாலக தேரர், சங்கைக்குரிய ஒமாரே கஸ்ஸப தேரர், சங்கைக்குரிய கொங்கஸ்தெண்ணே ஆனந்த தேரர், சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் நிமல் வாகிஷ்ட, கலாநிதி குணதாச அமரசேகர, தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள், கலாநிதி நளின் டி சில்வாவின் உறவினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(மறைந்த கலாநிதி நளீன் டி சில்வாவின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவில் நடைபெற்றன)

பிரதமர் ஊடகப் பிரிவு