’புராஜெக்ட் ரன்’ விருது பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகள்

’எம்மிலிருந்து நாட்டிற்கு - நாட்டின் முன்னேற்றத்திற்கு’ எனும் தொனிப்பொருளில் மதர் ஸ்ரீலங்கா அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “புராஜெக்ட் ரன்“ திட்டத்தின் பரிசளிப்பு விழா இன்று (28) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

பாடசாலையில் அல்லது பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்தில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் திட்டம், புராஜெக்ட் ரன் திட்டத்தின் மூலம் பாடசாலை பிள்ளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மாணவர்களின் தேசப்பற்றை வளர்த்தல், படைப்பாற்றல் - சுதந்திரம் - தலைமைத்துவ திறன் - திட்ட முகாமைத்துவத் திறன் மற்றும் தொழில் முயற்சியாளர் திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் தலைமுறையை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதற்கான தெளிவை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இங்கு முதலாம் இடத்தைப் பெற்ற யா/ மயிலணி சைவ மகா வித்தியாலயம், இரண்டாம் இடத்தைப் பெற்ற அம்/அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, மூன்றாம் இடம் பெற்ற நிகவெரட்டிய கு/மஹசென் தேசிய பாடசாலை உள்ளிட்ட வெற்றியாளர்களுக்கு பிரதமரினால் விருதுகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தீவின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2021/22 ஆம் ஆண்டிற்காக 150 பாடசாலைகளில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அதில் 75 பாடசாலைகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன. இதில் 2 பாடசாலைகள் விசேட விருதுகளையும், மேலும் 03 பாடசாலைகள் தேசிய மட்டத்திலும், 11 பாடசாலைகள் மாகாண மட்டத்திலும் வெற்றி பெற்றன.

இலங்கை மாணவர் சமூகத்தை நாட்டுக்கு ஆற்றவேண்டிய பணியை ஆழமாகச் சிந்தித்து செயற்படும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கான அனுபவத்தைப் பெறுவதற்காக R – Responsible Citizenship - பொறுப்புள்ள குடிமக்கள், U - Unity - ஒற்றுமை, ), N – National Pride - தேசிய பெருமை ஆகிய 3 கருப்பொருள்களின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கையர்களிடம் தாய்நாட்டைப் பற்றிய நம்பிக்கையான எண்ணங்களை உருவாக்குதல், தாய்நாட்டை நேசிக்கும் குடிமக்களாக மாறுவதற்கு தற்போதைய தலைமுறையில் பரந்த நேர்மறையான அணுகுமுறைகளை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலங்கையர்களை அபிவிருத்திச் செயன்முறைகளுக்கு நேரடியாக பங்களிக்க ஊக்குவித்தல், மற்றும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், இலங்கையின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இலங்கையர்களிடமும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கங்களுடன் நீண்ட கால திட்டமாக 2008 ஆம் ஆண்டு மதர் ஸ்ரீலங்கா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், மதர் ஸ்ரீலங்கா அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஜானகி குருப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு