புத்தாண்டில் இயற்கையோடு இணைந்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயம் காலாகாலமாக இருந்து வரும் எமது பாரம்பரியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

பியகம, வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெய்யன்துடுவ புராதன விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவி்த்த பிரதமர்,

"இன்று, முழு தேசமும் இந்த நிகழ்வில் ஒன்றாக பங்கு கொள்கிறது. இது எங்கள் பாரம்பரியம். இலங்கையர்கள் மட்டுமே சூழலுடன் இணைந்து இதுபோன்றதொரு கலாச்சார விழாவை நடத்துகிறார்கள். இந்த புத்தாண்டில், முழு தேசத்திற்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பணிக்காக பிரார்த்திக்கின்றோம்"

முழுமையான அரச அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. புத்தாண்டு கலாசார விழாவின் இறுதிக் கட்டமாக மனதை ஓர்முகப்படுத்தும் வகையில் தலையை முதன்மையாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வை சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்திருந்தன. உற்சவங்களின் போது புனித சின்னத்தை ஏந்திச் செல்லும் ஹஸ்திராஜா யானையின் தலைக்கும் எண்ணெய் பூசப்பட்டது. பின்னர், பிரதமர் தலைமையில், மக்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், விகாராதிபதி சங்கைக்குரிய வெலமிட்டியாவே சீலரத்ன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உட்பட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு