இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து தொழில்முயற்சியாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

தாய்லாந்தின் வர்த்தகர்கள், கைத்தொழிற்துறையினர் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்ட மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு வரிச் சலுகைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் பல சந்தைவாய்ப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மே 31 ஆந் திகதி பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாய்லாந்தின் கைத்தொழில் சம்மேளனம், தாய்லாந்தின் சுற்றுலா பேரவை, தாய்லாந்தின் முதலீட்டு அபிவிருத்திச் சபை, தாய்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக சங்கம் ஆகியன பங்குபற்றிய மன்றத்தில் உரையாற்றிய பிரதமர், வலுவான சமய கலாசார மற்றும் சமூக பிணைப்புகளுடன் தாய்லாந்து இலங்கையின் நீண்டகால நண்பராக இருப்பதால் இலங்கை பரஸ்பரம் முதலீட்டு வாய்ப்புகளை எதிர்பார்க்கிறது எனத் தெரிவித்தார்.

நிலையான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக உயர்மட்ட வர்த்தகத்துடன் கூடிய முதலீட்டு நட்பு நாடாக இலங்கை மாறுவதற்கு அரசாங்கம் முதன்மையான முன்னுரிமையை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை செயற்திறமான மற்றும் பன்மடங்கு வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் தாய்லாந்தின் முதலீட்டு சமூகத்தை இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ஜித் விஜயதிலக மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணையாளர் ரேவன் விக்கிரமசூரிய ஆகியோர் இந்த முதலீட்டு மன்றத்தில் இணைய வழியூடாக இணைந்து முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஊக்குவிப்புகள் குறித்து விளக்கினர்.

இலங்கை தூதுவர் சீ.ஏ. சமிந்த கொலன்னே தாய்லாந்தின் பிரதிநிதிகளை வரவேற்று முதலீட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கினார். தாய்லாந்து-இலங்கை வர்த்தக சம்மேளனம், தாய்லாந்து முதலீட்டுச் சபை, தாய்லாந்து வர்த்தக சபை மற்றும் தாய்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் பல உயர் மட்ட உயரதிகாரிகள் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம் தாய்லாந்து மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலாபகரமான முதலீடுகளை செய்வதற்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது விளக்கியதாக பொருளாதார ஆலோசகர் தென்னகோன் ருசிறிபால சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, இலங்கை தூதுவர் சமிந்த கொலொன்னே, பொருளாதார ஆலோசகர் டி ருசிறிபால மேலதிக செயலாளர் தீபா லியனகே மற்றும் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு