கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு, மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் நேற்று (2023.01.05) பிரதமர் அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் என்றும் பிரதமர் கூறினார். மீன்பிடி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், இலத்திரனியல் மற்றும் சுற்றுலா போன்ற புதிய துறைகளிலும் முதலீட்டாளர்கள் வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் முதலாம் செயலாளர் ஷானன் மேர்னி மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.