அறநெறிக் கல்விக்கு பல தடைகள் உள்ளன. அறநெறிப் பாடசாலை ஆசிரியர் இலட்சியக் கோட்பாட்டின் ஊடாக அந்தத் தடைகளை நீக்க முடியும்.

புத்தாண்டின் முதல் நாளன்று சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இன்று (2023.01.01) களனி ரஜமஹா விகாரைக்கு சென்றிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், களனி ரஜமஹா விகாரையில் சமய வழிபாடுகளை நிறைவேற்றியதன் பின்னர் களனி ரஜமஹா விகாரையின் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரரைச் சந்தித்தார்.

அதன் பின்னர், நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்த பிரதமர், அபயாராமயில் நடைபெற்ற தம்ம பாடசாலை ஆசிரியர் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அங்கு உரையாற்றிய பிரதமர்... “எமது நாட்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த பௌத்த சங்கங்கள் மற்றும் தலைவர்களுக்கு தம்மக் கல்வி பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அந்த சமயப் பணியின் காரணமாகவே புத்தபெருமான் கூறிய தர்மத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் தம்ம பாடசாலை ஆசிரியர்களின் பணியும் முக்கியமானது.

இரண்டாயிரத்து அறுநூறு வருட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பௌத்த தத்துவம், தலைமுறை தலைமுறையாக இன்னும் பல நூற்றாண்டுகள் பின்பற்றப்படக்கூடியதாக மாறியுள்ளது. எனவே, தம்மப் பாடசாலை ஆசிரியர்களாகிய நீங்கள், பிள்ளைகள் சமயத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறந்த மற்றும் உன்னதமான பணியாகும். மஹா சங்கத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை கல்வியின் காரணமாகவே சமயநெறி உயிர்ப்புடன் இருக்கிறது.
அதைப் பாதுகாக்கும் வகையில், ஆசிரியர்கள் ஆற்றிவரும் பங்கை தொடர அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்.

நாட்டின் புதிய தலைமுறையினர் தர்மத்தைப் புரிந்து கொண்டு சரியான வழியில் வளரவும், அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றவும், அறநெறிப் பாடசாலைகள் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது.

சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலேயே தம்ம பாடசாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஞாயிற்றுக் கிழமை அறநெறிப் பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு சமயக் கல்வி மூலம் வழிகாட்ட அரசு முடியுமான அனைத்தையும் செய்யும்.

இங்கு அநுசாசன உரை நிகழ்த்திய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்...

“பௌத்த சாசனத்திற்கும் தம்ம பாடசாலை கல்விக்கும் அன்று முதல் இன்று வரை தினேஷ் குணவர்தன அவர்கள் வழங்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தேசிய இயக்கத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.

இது தேசிய இயக்கத்தின் மையம். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த இடத்தில் இருந்து நாட்டுக்காக நாம் உழைத்தோம். நீங்கள் பொரலுகொட சிங்கத்தின் வாரிசு. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையாலும் பேச்சுக்களாலும் பாராளுமன்றம் மக்களால் வெறுக்கப்படும் நிறுவனமாக மாறியுள்ளது. பாராளுமன்றம் என்பது நாட்டை உருவாக்கும் இடம்.

அங்கு மோசமாக இருந்தால், ஏனைய இடங்களின் நிலை என்னவாக இருக்கும்? இவர் தனது தாய் தந்தை மற்றும் தலைமுறையின் பெயரை ஒருபோதும் கெடுத்ததில்லை. அதிகாரத்தில் இருந்து ஏதாவது செய்ய முடிந்தால், அதை அவர் செய்யத் தவறியதில்லை. தினேஷ் குணவர்தன நாம் எப்போதும் விரும்பும் ஒரு ஆளுமை. தேவையான சந்தர்ப்பங்களின் போதெல்லாம் அவர் முன்னின்று உழைத்திருக்கிறார்.

யாராவது முடிந்தால் அவர் இலஞ்சம் வாங்கியதாக ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக் காட்டுங்கள். எதிர்காலத்திலும் அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட இடமில்லை எனத் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தின் தலைவர் மெஹேந்திர பெரேரா, அறுபது வருட தம்ம பாடசாலை சேவைக்காக கௌரவிக்கப்பட்ட ஆசிரியர் ஷெல்டன் கீர்த்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.