ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும்.

மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்...

இன்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தின் விசேட கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

மாபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் எமது நாட்டின் இலக்கியத்தின் பெருமையை முன்னிறுத்தி இலக்கியம், மொழி, சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களின் தொகுப்பில் உள்ள இலக்கியப் படைப்புகளை தேசிய நூலகத்திடம் கையளிக்கும் இந்த வேளையில், நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கண்களால் பார்த்து மகிழும் வகையில், அந்த செல்வத்தை கட்டியெழுப்பிய நமது சிறந்த இலக்கியவாதியை நாம் நினைவுகூருகிறோம். தேசிய நூலகம் இனிமேல், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில், இந்த இலக்கயச் சொத்தை வழங்கும் பணியை மேற்கொள்ளும்.

நமது நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களின் குடும்பத்தினர் இதுவரைப் பாதுகாத்து இன்று அதனை அடுத்த தலைமுறையின் நன்மைக்காக தேசத்திடம் ஒப்படைப்பது மிகவும் முக்கியமானது என்பதோடு, அதற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க இந்த குடும்பம் செய்த பணியை விட அதிகமாக இங்கு செய்யப்படும் என்று நம்புகிறோம். மார்ட்டின் விக்கிரமசிங்க தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பற்ற இலக்கியவாதி. உலகின் இலக்கிய மையங்களாக திகழும் நாடுகளில் அவருக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. இன்று இந்த நூலகம் அவ்வாறு இணைந்துகொள்வதானது எமது நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தனித்துவமானது.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் -

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

தேர்தல் தொடர்பான அரசின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் அதற்கான தயார் நிலைபற்றியும் அறிவித்துள்ளனர். அதுபற்றி அரசாங்கமும் அறிவித்துள்ளது.

மே தினத்தின் போது சனத் திரளைப் பார்த்து தேர்தலை தள்ளி வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

மக்கள் கூட்டத்தைப் பார்த்து எந்தவிதமான அரசியல் தீர்மானமும் எடுக்கப்படுவதில்லை. முன்னோக்கி செல்வதைத் தவிர குழப்பமடையவோ அல்லது பின்னோக்கிச்செல்லவோவேண்டிய தேவை கிடையாது.

ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்ட அன்றைய இரவில் இருந்தே ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்தோம். பாராளுமன்றத்தை மூடி அழிவை ஏற்படுத்த முற்பட்டவர்களை விரட்டியடித்து நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதை மறந்துவிடாதீர்கள். ஜனநாயகம் மட்டும் அவ்வாறு கட்டியெழுப்பப்படவில்லை. பாராளுமன்ற முறைமையையும் மக்கள் ஆணையையும் முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத்தின்படி செயற்பட்டோம். தேர்தல் சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டுமாயின் பின்பற்றுவதற்கு உள்ள மிகவும் கடினமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை முறைமை உள்ளது. அவ்வாறில்லாது, அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தை நடத்திச் செல்லலாம். தேவைப்பட்டால் விரைவில் வீட்டிற்கு செல்லவும் முடியும். அல்லது எங்களுக்கு வீட்டுக்குப் போக வேண்டும் என்று தாங்களே சொல்லவும் முடியும். அதற்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பொதுத் தேர்தல். பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிலர் பொறுப்பில்லாமல் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள். அரசாங்கத்தில் எந்தச் சூழலிலும் விவாதிக்கப்படாத ஒரு விடயம் பற்றி, திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு, பொறுப்பற்ற வகையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக அரசோ, பாராளுமன்றமோ ஒருபோதும் அனுமதிக்காது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலொன்றுக்கு அழைப்புவிடுப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்திடமா? அல்லது தேர்தல் ஆணைக்குழுவிடமா உள்ளது?

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடமே உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி முன்கூட்டியே அழைப்புவிடுக்கவும் முடியாது. பிந்தி அழைக்கவும் முடியாது. இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்தும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது, இல்லையா?

இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஆணை ஜனாதிபதிகளுக்கு இருந்தது. தமது சொந்த அரசாங்கங்களை வைத்திருந்த ஜனாதிபதிகள் வெற்றி பெறலாம் என நினைத்து அரசாங்கத்தை கலைத்து தோற்றுப்போன சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். கட்சியும் எதிர் கட்சிக்கு போக வேண்டியதாயிற்று. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. புதிய பாராளுமன்றம் ஒன்று உருவாகி இரண்டரை வருடங்களின் பின்னர் அதனை கலைப்பதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு உள்ளது.

சவால்களுக்கு மத்தியில் எமது பாராளுமன்றம் மிகவும் பொறுமையாக பயணிக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் உண்டு. அது இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாவிட்டால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதிக்கு கலைக்க முடியும். இல்லையெனில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பாராளுமன்றத்தின் காலம் முடிவடையும்.

இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன, தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, பேராசிரியர் ஜே.பி.திஸாநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, பேராசிரியர் பத்மலால் என். மானகே மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு