சீனாவின் யுனான் மாகானத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பு...

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ கேட்டுக் கொண்டார்.

அலரி மாளிகையில் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் வர்த்தகம், சுற்றுலா, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

யுனான் மாகாண அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை வந்திருக்கும் வாங் யூபோ, இலங்கையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்தார். 50 மில்லியன் மக்கள்தொகை மற்றும் 2022 இல் சுமார் 417 பில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், யுனான் மாகாணம் இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு உதவும் நிலையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கொழும்பு துறைமுக நகரையும் ஆளுநர் பார்வையிட்டார். அவர் கண்டி, பொலன்னறுவை மற்றும் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் போது 25 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுகள் நகரிலுள்ள பல பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல்களில், இலங்கையில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையை முன்னோடி திட்டங்களாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அவர்கள் அடையாளம் கண்டனர். நவீன டிஜிட்டல் பொருளாதார பொறிமுறைகள் ஊடாக உள்ளூர் சமூகங்களுக்கு நேரடியாக பயன்கள் கிடைக்கும் என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.

தொழில்முயற்சி, நுண்கடன் வசதிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு ஆதரவளிக்குமாறு யுனான் ஆளுநரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். வருமானத்தை ஈட்டுவதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் மக்களை வலுவூட்டுவது பெரிதும் உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, யதாமினி குணவர்தன, சீனத் தூதுவர் கீ சென்ஹோங், யுனான் மாகாணத்தின் வெளிவிவகாரப் பணிப்பாளர் நாயகம் யாங்மு, கல்விப் பணிப்பாளர் நாயகம் வாங் யுன்ஃபீ, வர்த்தக மற்றும் விவசாயப் பணிப்பாளர் லி யாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு