"பழைய பொருளியல் பாடநூல்களில் கடற்றொழில் என்பது தனியான ஒரு துறையாக இருக்கவில்லை. புதிய திட்டங்களின் கீழ் இலங்கை மீனவர்கள் உலகிற்குள் பிரவேசிக்க வழிசெய்யப்படும்". - பிரதமர் தினேஷ் குணவர்தன.

கடலில் இருந்து பெற்றுக்கொண்ட மீன் வளத்தை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வரும் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட “குளிரூட்டும் முறைகளுடன் கூடிய முதலாவது பலநாள் மீன்பிடி படகு 2023.01.03. அன்று திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் உதவியின் கீழ் அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைக்கும் நோக்குடன் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம், நாரா நிறுவனம், நெர்ட் நிறுவனம் மற்றும் சீனோர் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்...
“எமது மீனவர்கள் கடலுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் மீன்பிடி உற்பத்திகளைப் பாதுகாக்க இதுவரை இல்லாதிருந்த ஒரு முக்கியமான திருப்புமுனை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையை நாம் சவாலாக ஏற்று முகம்கொடுக்க வேண்டும்.

எமது மீன் உற்பத்தியில் சுமார் 40 முதல் 60 வீதத்தை கரைக்குக் கொண்டு வரும்போது பாதுகாக்க முடியாதிருப்பதால் 100 வீத வருமானத்தைப் பெற முடியாதுள்ளது. மேலும் வழங்கலும் குறைந்து வருகிறது. என்றாலும் மீனவர்களுக்கு ஏற்படும் செலவு குறையவில்லை. பல நாள் மீன்பிடி பயணங்களில் இயந்திரப் படகுகள் மூலம் அதிக அளவு மீன்களை பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையானது ஒரு மிகப்பெரும் புரட்சியாகும்.

எமது வீண்விரயத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ, அந்த அளவுக்கு எமது வெற்றியின் அளவும் கூடுகிறது. இந்த புதிய செயன்முறை மீனவரின் வருமானத்திற்கு மட்டுமல்ல, அவரது வாழ்க்கைத் தொழிலின் மீதான நம்பிக்கைக்கும் ஒரு பெரிய ஊக்குவிப்பாக அமைகிறது.

பழைய பொருளியல் பாடநூல்களில் கடற்றொழில் என்பது தனியான ஒரு துறையாக இருக்கவில்லை. இவ்வளவு காலமாக, பொருளாதார பகுப்பாய்வு தரவுகள் விவசாயத் துறையின் உள்ளேயே உள்ளடக்கப்பட்டிருந்தது. கடற்றொழில் துறையை சுயாதீனமானதாக மாற்றி, அதனை சுயாதீனமாக மேம்படுத்துவது பொருளாதாரத்திற்கு பெரும் பயனாக அமையும்.

திக்ஓவிட்ட துறைமுகம் சில காலங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக் கடன் திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டது. அதிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு எமது மீன் வகைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. நாம் வழங்கும் உற்பத்திகளின் சுவை மட்டுமன்றி, தரமும் உயர்தரமாக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே இலங்கையின் மீன் உற்பத்தியைக் கோரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா...
மீனவ சமூகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.எமது நாட்டில் மண்ணெண்ணெய்யில் சுமார் இருபத்தேழாயிரம் மீன்பிடி படகுகள் இயங்குகின்றன.மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் மீன்களை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே, செலவைக் குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் நவீன சாதனமொன்றை அறிமுகப்படுத்த தயாராக உள்ளோம். பெட்டரியில் இயங்கும் இந்த சாதனம் குறைந்த செலவில் மீன் பிடிப்பதை சாத்தியமாக்குகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கடல் வளம் குறைவினால் மீன் அறுவடையில் குறைவு ஏற்பட்டுள்ளது. கடல் வளங்களை முறையான முகாமைத்துவத்துடன் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது கடல் வளங்களை பாதுகாக்க உதவும் அதே வேளையில் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்கும். நன்னீர் மீன்பிடி தொழில் தொடர்பாகவும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டில் இந்த இலக்குகளை அடைந்துகொள்வதே எமது எதிர்பார்ப்பாகும்."
இங்கு உரையாற்றிய கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த...
“இந்தப் பல நாள் படகுகள் மூலம் கிடைக்கும் மீன் வளத்தை முறையாக அறுவடை செய்கிறோமா என்பதில் சிக்கல் உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முக்கியக் காரணம் முறையான முகாமைத்துவம் இல்லாமையாகும். இந்த அப்பாவி மீனவர்களுக்காக, நாட்டின் பொருளாதாரத்திற்காக நாம் நிறைய வேலைகளைச் செய்ய முடியும்.

இன்று இந்த மீன்பிடி தொழிலில் இந்த மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அறுவடை செய்யும் மீன் வளம் எவ்வளவு வீணாகி வருகிறது?. அதன் தரம் எவ்வளவு குறைவடைகிறது? இவ்வாறான சூழ்நிலையில்தான் உலக உணவு தாபனம் எமக்கு பலமாக இருக்கிறது.

தற்போது மீனவர்களின் நலன் பேணலுக்காகவும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவும் மேலும் மீனவர்களின் பாதுகாப்புக்காகவும் காப்புறுதி முறை மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம், மீனவர்களின் குழந்தைகளுக்காக கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மீனவர்களை அணுகி தீர்வு காண பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீன் வளத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவே இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். இது ஒரு முன்னோடித் திட்டம். இந்த முன்னோடித் திட்டத்தினால் நாட்டின் மீன்பிடித் தொழிலில் ஒரு பொற்காலத்தை உருவாக்க முடியும்.

இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி, பிரசன்ன ரணவீர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க, உலக உணவு மற்றும் விவசாய தாபனத்தின் உதவிப் பிரதிநிதி நளின் முனசிங்க, தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (NERD) தலைவர் பேராசிரியர் எஸ். யு. அதிகாரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.