புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதியதோர் எண்ணக்கரு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசின் அடிப்படை நோக்கமாகும்...

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இன்று (2024.05.28) இடம்பெற்றது.

சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வழங்கப்படும் இந்த இயந்திரம் ஒன்றின் மூலம் ஐந்து குடும்பங்களுக்கு நேரடி வருமான வழிகள் திறக்கப்படுவதுடன் அந்தக் குடும்பங்களைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் இதன் மூலம் மறைமுகப் பயன்களைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் நோக்கம் வருமானம் ஈட்டும் வழிகளை மேம்படுத்துதல், குடும்ப போசாக்கினை மேம்படுத்துதல், நாட்டில் பொதுவாக முட்டை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் வீட்டு மட்டத்தில் தன்னிறைவான வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் ஆகும்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

கடந்த காலங்களில் எமது நாட்டில் வீடு வீடாக பிரபலமாக இருந்துவந்த வருமான வழியான கோழி வளர்ப்பு மற்றும் முட்டை வியாபாரத் திட்டத்தை கிராம மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடரில் இத்திட்டம் இன்று இந்த பிரதேசத்திற்கு பொறுப்பளிக்கப்படுகிறது. இங்கு நடப்பது என்னவென்றால், நல்ல அனுபவம் உள்ள ஒருவரை அந்த அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுத்துவதுதான். இங்கு வழங்கப்படும் பயிற்சிக்குப் பின்னர், அந்தத் தொழிலுக்கு உதவும் இயந்திரம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம். வீட்டில் ஓரளவு வருமானத்தை ஈட்ட முடியும் மற்றும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான முட்டையைப் பெற முடியும். இந்த நாட்டில் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் சீனக் குடியரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதிய எண்ணக்கருவுக்கு இதன் மூலம் பெரும் பலம் கிடைக்கிறது. நாம் பெற்ற அறிவை இளைஞர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்காக வழங்க முடியும்.

கொலன்னாவ அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இங்கு கருத்துத் தெரிவித்தார்.

பிரதமரின் சீனப் விஜயம், நாட்டுக்கு பயனுள்ள ஒரு விஜயமாகும். அந்த விஜயத்தின் போதும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை பிரதமர் மறக்கவில்லை. அதனால்தான் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

வீட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய பெட்டியில் குஞ்சுகளை வளர்த்து வந்த ஒருவர் இன்று இந்த இயந்திரத்தை பெற்றுக்கொள்வதைப் போன்று எதிர்காலத்தில் குஞ்சுகள் வளர்க்கக்கூடிய பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். எல்லோராலும் அரசாங்க வேலை செய்ய முடியாது. தன்னம்பிக்கை தான் தேவை. உங்கள் வியாபாரத்தில் வருமானம் ஈட்ட முடியும் என்று நம்புங்கள். வெளிநாடு சென்று நாட்டிற்கும் கிராமத்திற்கும் கொண்டு வந்த இந்த அன்பளிப்புக்காக பிரதமருக்கு நன்றி.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு