நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை புதிய அத்தியாயத்திற்குக் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தினது, அரசியலமைப்பினது, சட்டத்தினது, வரையறைக்குள் மட்டுப்படாது செயற்படுதல் வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை புதிய அத்தியாயத்திற்குக் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தினது, அரசியலமைப்பினது, சட்டத்தினது, வரையறைக்குள் மட்டுப்படாது செயற்படுதல் வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

2022.11.17ஆந் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விருது வழங்கும் விழாவில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற எதிர்கால சந்ததியினர் ஊடாக பல்வகைமையை உருவாக்க வேண்டியது, தற்கால சந்ததியினரது முக்கிய பொறுப்பாகும். நாற்பத்திரண்டு இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்களை இலக்கிய ரீதியாக வளமூட்டும் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் இலக்கிய நூலகமொன்றை அமைத்தல் கட்டாயமாகும் என்பதுடன், நவீன தொழிநுட்பங்களை நூலகக் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்து, பிள்ளைகளது அறிவினை வளம்பெறச் செய்தலும் மிக முக்கியமாகுமென பிரதமர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். இம்முறை தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில், நாடு முழுவதும் அமைந்துள்ள, 235 பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்திய வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலாநிதி வண.பாதேகம ஞானீஸ்சர தேரோ அவர்களும், வண.றம்புக்கணை சித்தார்த்த தேரோ அவர்களும், புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களும், கலாநிதி பிரனீத் அபேசுந்தர அவர்களும், சுனில் சரத் பெரேரா, புத்ததாச கலப்பத்தி, கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் தரிணீ கமகே உள்ளிட்ட பல இலக்கியவாதிகளும், கலைஞர்களும் கலந்துகொண்டனர்.