பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பிரதமரைச் சந்தித்தார்

இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாகத் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, ஜூலை மாதம் 31ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் சிறந்த இராணுவச் சேவை, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தாய்நாட்டிற்காகச் செய்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார்.

இதன்போது, தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்சார் தரங்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருவதற்காகத் தான் ஆற்றிய பங்களிப்பை முன்னாள் இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.

சந்திப்பின் இறுதியில், பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறையிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனாக உயர்த்துவதும், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை 800,000 வரை அதிகரிப்பதும், 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதும் அரசாங்கத்தின் ’2030 தேசிய சுற்றுலாத் தொலைநோக்கின்’ பிரதான இலக்காகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜூலை 31 அன்று நடைபெற்ற இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் (SLITHM) 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டில் ’இலங்கை ஹோட்டல் பாடசாலை’ என ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிபுணர்களை இத்துறைக்கு வழங்குவதற்குச் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் விருதுகளையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர், ’டிட்வா’ சூறாவளி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை பாராட்டுக்குரிய வகையில் மீண்டெழுந்துள்ளதாகவும், தற்போது சுற்றுலாத்துறையானது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதான சக்தியாக மாறியிருப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம் சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளதுடன், இத்துறையின் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 429,000 ஐக் கடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தொழில்நுட்ப அறிவைப் போலவே, சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வு, தொழில்முறை கௌரவம், மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிற்துறையாளர்கள் இத்துறைக்குத் தேவைப்படுகின்றனர் என்பதையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு SLITHM நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரதமர், பாதுகாப்பான பணிச்சூழலுக்குள் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, சுற்றுலா அமைச்சின் செயலாளர் தீர ஹெட்டிஆரச்சி, SLITHM தலைவர் வசந்த மந்திரீபால உள்ளிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், இராஜதந்திரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும் UNDP ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள் பிரதமரைச் சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள், ஜூலை மாதம் 31 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கையின் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக UNDP அமைப்பு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பாராட்டினார்.

கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முன்னுரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் இதன்போது பிரதிநிதிகள் குழுவிற்குத் தெளிவுபடுத்தினார்.

அரச துறையின் மீளாய்வுச் செயற்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளின் ஊடான ஆட்சேர்ப்புகள் மற்றும் அரச துறைக்குள் மனிதவள நிர்வாகத்தினை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், டிஜிட்டல் அரச உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் அரச சேவை வழங்கலைத் திறம்படச் செய்வதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்குமான பணிகளுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக விக்னராஜா அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை வலுப்படுத்துதல், நிலையான சுற்றுச்சூழல் வள மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துதல் என்பவற்றின் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வுக்காக நிதியைத் திரட்டுவதற்கான விரிவான காலநிலை நிதி மூலோபாயமொன்றைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார்.

எதிர்கால உலகின் உருவாகிவரும் வேலைவாய்ப்புச் சந்தைத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும், எதிர்காலப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு ஏற்பத் திறன் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்குமாக UNDP அமைப்பினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ’Future Skills Study’ குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், இலங்கையின் ’பராமரிப்புப் பொருளாதாரத்தை’ (Care Economy) மேம்படுத்துதல், பெண்களின் உழைப்புப் பங்களிப்பை உயர்த்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் குறித்தும் இருதரப்பிற்கும் இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பிரதி வதிவிடப் பிரதிநிதி Marina Ten, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை

பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கான பிரவேச வசதிகளை வழங்கும் இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் அவர்களின் தலைமையில் ஜூலை மாதம் 31ஆம் திகதி மேல் மாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

வீதியின் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பில் காணப்படும் அடைப்புகள் காரணமாக மழைக்காலத்தில் வீதியும் இருமருங்கிலுமுள்ள கட்டிடங்களும் தொடர்ச்சியாக வெள்ளத்தில் மூழ்குவதுடன், இதனால் பிரதேசவாசிகள், நிறுவனங்களுக்கு வருகை தரும் சேவைப் பெறுநர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதும், வீதியைப் புனரமைப்பதன் மூலம் பாரிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் பல கிடைக்கப்பெறும் போதிலும், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்புகள் மேற்கொள்ளப்படாமையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த சட்டவிரோத நிர்மாணங்கள் கூட உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பதும் இதன்போது தெரிய வந்தது.

இரத்மலானை கந்தவளை வீதியின் நீர் வடிந்தோடுதல் சரியான முறையில் இடம்பெறாமைக்குக் காரணமாக அமைந்துள்ள பிரதான காரணங்கள் சில இக்கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்டதுடன், மழைநீர் வடிந்தோடத் தடையாக இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள், வடிகாலமைப்பைச் சரியான முறையில் துப்புரவு செய்து பராமரிக்காமை மற்றும் தற்போது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற மதகுகள் மற்றும் பாலங்கள் தற்போதைய தேவைகளுக்குப் போதுமானதாக, பெரிதாக இல்லாமை என்பன அவற்றுள் பிரதானமானவையாகும்.

அத்தோடு, நீர் பாய்ந்தோடும் வீதி மட்டத்திற்கும் வடிகாலமைப்பின் அமைவிடத்திற்கும் இடையிலான உயரத்தின் வேறுபாடு வித்தியாசமாக இருப்பதும், அப்பிரதேசத்தின் நிலத்தடி நீர் மட்டம் தரை மேற்பரப்பளவிற்கு மிகச் சமீபமாக இருப்பதும் இந்த வெள்ளப்பெருக்கு நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள், வடிகாலமைப்பு மற்றும் கால்வாய்களின் பராமரிப்புப் பணிகள் உரிய நிறுவனங்களால் சரியாக அடையாளம் காணப்படாமை என்பன இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பாரிய தடையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, குறுகிய நிறுவன ரீதியான மற்றும் கடமை எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல், அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிற்சாலைகளுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சேவையாற்றும் வகையில் தயாரிக்கப்படும் இறுதித் திட்டத்தில் அப்பிரதேசத்தின் வெள்ளக் கட்டுப்பாடும் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கனவே இதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டதன் பின்னர், மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இரத்மலானை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான சமன்மலீ குணசிங்க, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வீதி உபகுழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேவானந்த சுரவீர, மேல் மாகாணப் பிரதம செயலாளர், தெஹிவளை-கல்கிஸ்ஸ மேயர் உள்ளிட்ட இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும் எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க “19-ஆம் நூற்றாண்டின் இலங்கைக் காட்சிகள்” கலைக் கண்காட்சியில் பிரதமர் பங்கேற்பு

ஜார்ஜ் கீட் அறக்கட்டளை மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “19-ஆம் நூற்றாண்டின் இலங்கைக் காட்சிகள்” (19th Century Views of Ceylon) கலைக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிகழ்வு பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் ஜூலை 30-ஆம் திகதி நடைபெற்றது.

வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் பொதுமக்களுக்காக நடத்தப்படும் முதலாவது கலைக் கண்காட்சி என்ற வகையில் இக்கண்காட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகின்றது. எட்வர்ட் லியர் (Edward Lear), ஆண்ட்ரூ நிக்கோல் (Andrew Nicholl) மற்றும் கான்ஸ்டன்ஸ் கார்டன் கம்மிங் (Constance Gordon Cumming) உள்ளிட்ட புகழ்பெற்ற பிரித்தானியக் கலைஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட, இலங்கையைச் சித்தரிக்கும் அரிய கலைப்படைப்புகளின் தொகுப்பே இதில் காட்சிப்படுத்தப்பட்டது. பெரும்பாலும் தனிநபர் சேகரிப்புகளிலிருந்து பெறப்பட்ட இக்கலைப்படைப்புகள் பல, முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதுடன், அக்காலப்பகுதியில் வருகை தந்த கலைஞர்களின் பார்வையில் இலங்கையின் இயற்கை நிலப்பரப்புகள், கட்டிடக்கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க காட்சிப் பதிவுகளாக விளங்குகின்றன.

கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் கலைகளின் ஊடாக சர்வதேச கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், ஏற்பாட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இக்கண்காட்சி, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வரலாற்று ரீதியிலான உறவுகளைப் பிரதிபலிப்பதுடன், இலங்கையின் வளமான கலைப் பாரம்பரியம் பற்றிய ஆழமான மதிப்பீட்டையும் எடுத்துரைக்கின்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick), ஜார்ஜ் கீட் அறக்கட்டளையின் தலைவர் மாலக தல்வத்த, ஜார்ஜ் கீட் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள், கலாசாரப் பிரமுகர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒரு நாடும் அதன் சமூகமும் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், அதற்குத் திறமைகளும் தொலைநோக்கும் கொண்ட இளஞ்சந்ததியினர் அவசியமாகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அத்தோடு, அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், அதனை யதார்த்தமாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு நாடும் அதன் சமூகமும் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், அதற்குத் திறமைகளும் தொலைநோக்கும் கொண்ட இளஞ்சந்ததியினர் அவசியமாகின்றனர் என்றும், அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், அதனை யதார்த்தமாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 30ஆம் திகதி, கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமான ’Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’Skills for Life’ எனும் தலைப்பில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் ’Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, விவசாயத் துறை சார் திறன் சபை, கைத்தொழில் திறன் சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சியை அக்டோபர் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், கொழும்பு 07, விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஆண்டுகளுக்கான கல்வித்துறை சார் முதலீடுகள், குறிப்பாகத் தொழிற்கல்விக்காகப் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை வெறும் கருத்தாக்கத்திற்கு அப்பால் சென்று நடைமுறைப்படுத்துவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொழிற்கல்வி என்பது ஒரு மாற்றுத் தெரிவு எனும் எண்ணக்கருவை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், அனைத்துப் பாடத்துறைகளும் வேலைவாய்ப்புகள், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புபடுவது போன்றே தனிநபர் வளர்ச்சிக்கும் தொடர்புபடுகின்றன எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு கல்விக் கண்காட்சி நாட்டின் அபிவிருத்திக்கும் சமூக முன்னேற்றத்திற்குமான ஒரு சந்தர்ப்பமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் இளஞ்சந்ததியினருக்கு, குறிப்பாக அனைத்துப் பிரதேசங்களையும் சார்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விராய் கெலி பல்தசார், இராஜதந்திரப் பிரதிநிதிகள், அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு